பக்கம்:அபிதா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 0 லா. ச. ராமாமிருதம்

எங்கேனும் கங்கைக் கரையில் உட்கார்ந்து 'பம்பம் மஹ்தேவ்' - வேறொண்ணும் தெரியவேண்டாம்-சொல்லி விபூதி குங்குமம் பிடிச்சுக் கொடுத்தேன்னா-மிச்சப் பல்லையும் தட்டிட்டு அத்தனையும் தங்க பல்லாக் கட்டிப்பேன்-”

[மனிதனுக்கு ஆசை எப்படியெல்லாம் பேசுகிறது!]

“-அங்கிருந்து வழிதப்பிப் போனாப் போல இந்தப் பக்கம் ஒருஒரு சமயம் பரதேசி வரானே, நம்நாட்டு ஆண்டி போல் வத்தக்காச்சியாவா இருக்கான்? எண்ணெய்க் குடத்திலிருந்து பிடுங்கினமாதிரி- தோள் ஒவ்வொண்ணும் பொலி மாட்டின் திமில் மாதிரி-இடுப்பா அது! முத்தின ஆலமரத்தின் அடிமரம். இந்தப் பக்கம் அந்தப் பக்கமும் ரெண்டு பேர் அணைச்சாலும் எதிருக்கெதிர் கை தொடாது. 'பம்பம் மஹ்தேவ்’ என்கிறான், ஏப்பம் விடற மாதிரி, அடித் தொண்டையில். மலையைக் குடைஞ்சு ரயில் ஓடரது. அதிலே ஏறிண்டே திரும்பவும் அவன் ஊர்பார்க்கப் போய்ச் சேர்ந்துடலாம். இவன்கள் எல்லாம் ஏன் இந்த க்ஷாமபூமிக்கு வரான்கள்?-”

இந்த மனுஷன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னவோ பேத்திண்டே போறானே, இந்த ப்ரதாபமெல்லாம் இவனை எவன் கேட்டான்? என் நாவில் மந்திரம் போல் ஒரு நாமம் துடித்தது. வெளிப்பட்டால் அதன் நயம் உடனே பொரிந்துபோம்.உள்ளிருந்தால், நான் வெடித்துவிடுவேன். அவ்வளவு நுட்பமான, வேகமந்த்ரம், வேதனாமந்த்ரம்.

என் வேதனை தெரிந்துதான் வேணுமென்றே என்னை வதை செய்கிறானா? அல்ல- எல்லாம்தான் வெட்ட வெளிச்சமாயிருக்கிறதே, அவன் சொல்லி நான் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று சொல்லாமலே விடுகிறானா? இரு மல்லர்கள் சமயம் பார்த்து ஒருவனுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/48&oldid=1126794" இலிருந்து மீள்விக்கப்பட்டது