உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 0 லா. ச. ராமாமிருதம்


“யாரது அம்பியா? என்னடா உயிரோடுதான் இருக்கையா, செத்துப் போயிட்டையா? உருவே தெரியல்லியே? நாட்டுப் பெண்ணே வாடியம்மா! நமஸ்காரம் பண்ணறயா, பண்ணு பண்ணு- அப்படியில்லே திக்கு இதுதான் கிழக்கு- தோளோடு தாலி தொங்கத்தொங்கக் கட்டிண்டு பதினாறும் பெத்துபதினாறும் பெத்துடாதே. நான் சொன்னேனேன்னு, நாள் இருக்கற இருப்புலே! என்ன ஒண்ணுமே காணோமே, கைப்பிள்ளையேனும் அழைச்சுண்டு வரப்படாதோ? என்ன சிரிக்கறே. என்ன முழிக்கறே? ஒண்ணுக்குக்கூட வழியில்லையா? நீங்களேதான் ஒருத்தருக்கொருத்தர் எச்சிலா? சரி, பிராப்தம் அப்படியிருந்தால் நீயும் நானும் என்ன பண்றது? கடைக்காரனாவது கொசிர் போடறான். கடவுள் எடைக்குமேல் இம்மிகூட மாட்டேன்கறான். தவிட்டையும் தங்கத் தராசில்தான் நிறுப்பேன்கறான். ஆனால் யோகமும் இப்போ தவிட்டுக்குத்தான் அடிக்கறது. இங்கேதான் பார்க்கறையே, வதவதன்னு, போதாதா? வாடா பசங்களா, உங்கள் மாமாடா, மாமிடா, நமஸ்காரம் பண்ணுங்கோ! உங்கள் நமஸ்காரங்களும் கூலிக்குத் தானே! உங்கள் புது மாமி என்னென்னவோ பெட்டியிலிருந்து எடுக்கறாளே! எடுத்துண்டேயிருக்காளே! பிஸ்கோத்து பாக்கட் பாக்கட்டா, பப்பர்மிட்டு, சொக்காத் துணி, ரவிக்கைத்துணி- நீங்கள் இத்தனை பேர் இருக்கேள்னு எப்படிடா அவளுக்குத் தெரியும்? நாள் கழிச்சு பார்க்கறோம்; இதுவும் நியாயம் தான். ஆனால் நியாயத்துக்கும் எல்லை உண்டேப்பா அம்பி! அதைத் தெரிஞ்சுண்டிருக்கையா? தெரிஞ்சிருந்தால் சரி. இங்கிருந்தபடி உன் எல்லை என்னென்று நான் கண்டேன்? மயிர் நரைச்சுப் போனாலும் வாழ்வு பச்சையாயிருக்குன்னு வெச்சுக்கறேன், அதைத் தவிர எனக்கென்ன தெரியும்? நாள் கழிச்சு ஒத்தரையொருத்தர் பாக்கறோம். நீ போன முகூர்த்தம் நல்லபடியா திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/50&oldid=1126881" இலிருந்து மீள்விக்கப்பட்டது