உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 0 லா. ச. ராமாமிருதம்

நானொரு பச்சோந்தி
நானொரு பைத்யம்
நானொரு குழந்தை
எனக்கு உடனே கோபம்
—உடனே சிரிப்பு
காரணம் கேட்டால்
காரணம் அறியேன்
பட்டது விட்டு
நான் வெட்கம் கெட்டவள்—

என்று வானம் வெட்கம் தெரிவித்து, கெட்ட வெட்கத்தில் அழகு கொள்கிறது.

மணவறை மஞ்சத்தில் புலவி வெறியில் பிய்த்தும் உருவியும் தானாவும் உதிர்ந்த மலர்கள்போல் வானில் மேகங்கள் இப்போது சிதறிக்கிடக்கின்றன. இவ்வளவு மகத்தான கலவிகொண்ட விராட்புருஷன், அவனுடைய ஸ்திரீ யார்?

மனதில் ஒவியங்கள் மாறும் வேகம், விதவிதம். உடல் தாளமுடியவில்லை. இங்கு ஏதோ ரஸவாதம் என்னை சாக்ஷி வைத்து நேர்ந்துகொண்டிருக்கிறது.

இதோபார், கரடிமலை ஆட்டுமந்தை மேயும் குன்றாக மாறிவிட்டது. கண், முகம், கால், குளம்பு தெரியாது சின்னதும் பெரிதுமாய் உரோமப்பந்துகளாகி, மேகங்கள் திரள்திரளாய் ஊர்கின்றன, உருள்கின்றன, சுருள்கின்றன, தயங்குகின்றன, குன்றின்மேல் தவழ்கின்றன, குழைகின்றன, துவள்கின்றன. ஒன்றிரண்டு மொட்டைவால்கள் கூட மொட்டு விட்டிருக்கின்றன.

இதோபார் கரடிமலை திடீரெனக் கறந்தபால் நுரை பொங்கிவழியும் பெருங்குவளையாக மாறிவிட்டது. குன்றின் உச்சியில் மேகங்கள் அப்படி அடர்ந்து தூய வெண்மையைச் சொரிகின்றன, சுரக்கின்றன.

பாலின் கருணை, தாய்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/54&oldid=1663186" இலிருந்து மீள்விக்கப்பட்டது