பக்கம்:அபிதா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 o லா. ச. ராமாமிருதம்


ஆஹதியின் மந்த்ரகோஷம் இட, கால, தூரத்தைக் குடைந்து எட்டுவதுபோன்று ப்ரமை தட்டுகிறது. ஆனால் சென்றது, நிற்பது, இனி வரப் போவதன் பேதக்கோடுகள்,நிகழ்ச்சியின் நிபந்தனைகள் அழிந்த இந்த நிலையில் ப்ரமை எது? நிஜம் எது? புகை கண்ணைக் கரிக்கிறது. ஆனால் கசக்கக் கண் இல்லை, கையுமில்லை. அங்கம், அவயவங்கள் விழுந்து, இந்த அசரீரத்தில் ப்ரக்ஞை ஒன்றுதான் மிச்சம். எனக்கு நான் சாக்ஷி. என் சாக்ஷி எனக்குத் துணையெனும் சாரமும் விழுந்ததும் என்னைக் கவ்விக் கொண்ட திகில்- திகிலே அகிலாய், என்மேல் கவிந்து கொண்ட முகிலின் பேருருவம்தானா இந்தப் புகை?

இந்த ரீதி எந்நேரம். எவ்வளவு தூரம் இருந்ததோ? ஆனால் மேகங்கள் தம் நெய்தலில் இதோ உரமும் ஒழுங்கும் பெற ஆரம்பித்துவிட்டன. துகில், போர் போராய்க் குவிகிறது. இடையிடையே ஜரிகை சுடர் விடுகிறது. உயர்ந்த ரகஸல்லா மடிமடியாக வானில் அலைகிறது. இந்தத் திரைக்குப்பின், மஞ்சத்தில், ஜன்னலண்டை, பல்லக்கிலிருந்து என்னைக் கவனிப்பது யார்? என் உயிர், சக்தி யாவற்றையும் தன் பார்வையாலேயே உறிஞ்சிவிடுவது போலும், தன்னைக் காட்டாது தன் வேகம் மட்டும் களவு காட்டும். இந்தப் பார்வை யாருடையது? ஹிமவான் புத்ரி. ஹைமவதி, பர்வத ராஜகுமாரி-

திரை இதோ லேசாய் விலகுகிறது. ஒரு இம்மிதான். விலக்கிய விரல் நுனிகளுக்கப்பால் எடுப்பான புருவத்தின் வில்வளைவின் கீழ், இமையடியில், நுனிகொடுக்காய் வளைந்த கத்திகளை அடுக்காய்ச் சொருகினாற்போன்று நுனி நீண்டு சுருண்ட கண் ரப்பைமயிர்களின் கீழ் வெள்ளை விழி மேட்டில் சுழன்ற கருவிழி ஒன்று-

அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு, பூமியைப் பட்டை உரித்தாற்போல் என்னின்று ஒரு குரல் வீறிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/56&oldid=1130496" இலிருந்து மீள்விக்கப்பட்டது