பக்கம்:அபிதா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 0 லா. ச. ராமாமிருதம்


பரமபதத்துக்குத்தான் கொண்டு போய் விடுமோ அல்ல பெரிய பாம்பின் வாயில்தான் முடிகிறதோ? இந்தப் படிக்கட்டே ஒரு பெரும் மண்உணிப் பாம்போ?

      சென்று போன காலத்துள் புதையும்,
      தான் மென்று உமிழ்ந்த மண்ணில்
      புதைந்த மண்உணிப்பாம்பு.

சென்று போனதற்கும் இனி வரப்போவதற்கும் வித்தியாசம் என்ன? இரண்டுமே நடுநின்ற தருணத்தின் தூலச்சாயல்கள்தான்.

நான் தருணக்குமிழியில் மிதக்கிறேன். காலை ஊன்றி படிப்படியாக ஏறுவதாகவே தோன்றவில்லை. ஏதோ போதை அழுத்துகிறது.

திருவேலநாதர், காற்றில் உருவானவரேபோல் கண்னெதிர் திடீரெனப் பிதுங்குகிறார். காரணம்: அவரை நோக்கியே நான் ஏறிக்கொண்டிருந்தாலும் சமயத்தில் அவரை மறந்தாச்சு. ஆகையால், இப்போ அவர் என் கண்முன் படுகையில், அவர் நான் எதிர்பாராதவரே ஆகிறார்.

அவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? என்றும் அவர், அன்றே போல்தான் இன்றும். முடிந்தால் மண்டையின் உருண்டை முன்னிலும் பளப்பள. வழுக்கை வழவழ, காற்றும் புட்களும் போக்குவாக்கில் வீசியிறைத்த சருகுகள். குப்பைகூளங்கள். எச்சங்களின் அர்ச்சனை நடுவே ஆனந்தமாய் வீற்றிருக்கிறார். அவரைக் கேட்போருமில்லை. மீட்போருமில்லை.

   அவரும் பரஸ்பரம் அப்படித்தான்.
   கவலையற்ற கடவுள்.
   கொடுத்து வைத்தவர்.

நமக்குக் கவலையைக் கொடுத்த கவலையற்ற கடவுள்: கொடுத்து வைத்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/60&oldid=1126914" இலிருந்து மீள்விக்கப்பட்டது