பக்கம்:அபிதா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 59

“எல்லா கேள்விக்கும் ஒரே பதில், ஒரே பதில்தான். ஒரே கேள்வி. கேள்வியேதான் பதில்- ஆரிராரோ ஆராரோ-'

திடீர்னு தாத்தா சிரிப்பார். சிரிப்பு புரியாது; ஆனால் அதன் வேதனை மட்டும் எனக்கு அப்பவே புரியும்- ஏன் மாமா உங்கள் கண்ணில் திரை மறைக்கறது?’’

வெட்கமற்ற கண்ணீர்- அல்ல, வெட்கம் நிறைந்ததா- என் கன்னங்களில் வழிகின்றது. ஆயினும் என் குரல் மட்டும் கண்ணீரில் குவித்ததாய், சுத்தமாய், தெளிவாய் ஒலிக்கின்றது.

"உன் கதை நீ சொல்கிறாய். புஷ்பம் மலர்வதுபோல், அர்த்தங்கள் ஆயிரம் இதழ்கள் என்னில் தளையவிழ்கின்றன. ஆனால் உன் தாத்தா சொன்னாற்போல்-ப்ரயோஜனம்?”

“எல்லோரும் சேர்ந்து என்ன புதிர் பேசுவேளோ! எனக்குத் தலை சுத்தறது.”

“ஆனால் ஒன்று சொல்கிறேன்.”

அவள் புருவங்கள் வினாவில் உயர்கின்றன. ஆவேசம் வந்தாற்போல் என் வாயினின்று ஏதோ வார்த்தைகள் புறப்படுகின்றன.

“சக்கு, நீ சாகவில்லை.”

அவள் பின்னடைந்தாள். அவள் விழிகள் வட்டமாயின. பயம், வியப்பு, நான் அவளை நெருங்கினேன்.

“கிணற்றில் குடத்தை விட்டு, ஜலத்தைக் கலக்குமுன் ஜலத்தின் பளிங்கில் தெரிவது யார் என்று கிணற்றில் எட்டிப் பார்!”

அவள் கண்களில் கலக்கம் சட்டென விட்டது, புன்னகையில் கன்னங்களில் வெளிச்சம் படர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/65&oldid=1127255" இலிருந்து மீள்விக்கப்பட்டது