62 0 லா. ச. ராமாமிருதம்
போவோம். நீ சொல்கிறாய். நீ செல்கிறாய். நான் உடன் வருகிறேன்.
மலையடிவாரத்தில் கிணறு. ராட்டினத்தில் தொங்கும் கயிறுக்கு இதுவரை கள்ளன் வந்ததில்லை. எட்டிப் பார்க்கிறேன். அதோ அபிதா! தாம்பு நுனியில் குடம் விடுவிடென இறங்கி தொப்பென்று ஜலத்தில் விழுந்து மொண்டெழுந்த வேகத்தில் ஜலம் அதன் கண்ணாடி கலங்கி, சிற்றலை அதிர்ந்து அடங்கும் மிளிர்வில் அதோ சக்குமுகம் தோன்றிச் சிரித்து நலுங்குகிறது.
'விர்'ரென்று மேலேறி வரும் குடத்தை வசியமுற்றவனாய்க் கவனிக்கிறேன்.
கழுத்தில் கயிறுடன் தொங்குவது குடமா? நானா? எனக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது?
பிடிச் சுவர்மேல் குடத்தை இறக்கி, சுருக்கைக் கழற்றி அவள் குடத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்ட வேகத்தில், ஜலம் அவள் முகத்தில், உடல் முகப்பில் விசிறி நனைத்தது.
ஜலமா? நானா?
குடத்தை ஒரு கை அணைக்க, மறுகையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.
சிரிக்கிறாள்.
அவள் நடக்கையில் குடத்தில் ஜலம் தளும்பிச் சிரிக்கிறது.
நானா? என்னைப் பார்த்து நானேயா?
வான் விளிம்பில் ஒரு நக்ஷ்த்ரம் அர்த்தத்துடன் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.
அவள் முன் செல்கிறாள்.
நான் பின் செல்கிறேன். அவள் நடையில் இடுப்பின் கடையலில் என் மனம் பறிபோகின்றது.