பக்கம்:அபிதா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அபிதா


வண்டியின் கதிவேகத்தில் எதிர்வண்டிகள் மேலேயே சரிந்துவிடும் போல் கடந்தன. மில்களின் ராக்ஷஸப் புகைப் போக்கிகள், மில் காம்பவுண்டில் நிலக்கரி மலைகள், ரயில் திடீரென இறங்கும் பள்ளத்தாக்குகள், உடனே தொத்திக் கொண்டு ஏறும் சரிவுகள், மலைகள், மலையைக் குடைந்து சுரங்கங்கள், சுரங்கத்துள் நுழைந்ததும் ஓட்டச் சத்தம் அன்றி மற்றனைத்தும் அதனுள் மூழ்கிப் போன காரிருள், சுரங்கத்தினின்றும் வெளிப்பட்டதும் கண்ணை உறுத்திக் கொண்டு பெருகும் ஒளி வீழ்ச்சி, அகன்ற மைதானங்கள், அடர்ந்த காடுகள், காடுகளில் மேயும் மான் கூட்டங்கள் தலை நிமிர்கையில் மேலே கிளைபிரிந்த கொம்புகள், கட்டான் கட்டானாய் வண்டி வேகத்தில் முகம் திரும்பும் வயல்களில் பயிர்களின் பச்சை நடுவில் சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் ஊதாவுமாய் ஆண் பெண்களின் ஆடைகள், கூந்தல் முடிச்சுகள், கொண்டைகள், வானில் பகல் பூரா சூரியசக்கரம் உழுது உருண்ட - பாதையில் முளைத்துப் பழுத்துப் பல ரங்குகளில் சாய்ந்த ஒளிக்கதிர்கள், புலவியில் பூமியைக் கவ்விக் கடித்து மேல் கவிந்த வான்கவானில் சிந்திய விந்து வெனக் கட்டிய நக்ஷத்ரக் கூடுகள், நேரம் முதிர்ந்து எழுந்து தோப்புகளிடையே எங்களுடன் கூடவே குதித்து ஓடிவரும் நிலா திடீரெனக் கிளைகளின் சிக்கலினின்று விடுபெற்று ஆகாய வீதியில் உருண்டதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/7&oldid=1125577" இலிருந்து மீள்விக்கப்பட்டது