பக்கம்:அபிதா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 O லா. ச. ராமாமிருதம்

இதில் ஒரு சமயம் நீ சகுந்தலை.

ஒரு சமயம் சாவித்ரி.

மறுசமயம் அபிதா.

அத்தனையும் உன்- 'நீ'யின் சட்டையுரிப்பு.

நான்- நான்-

கனவிலிருந்து விழித்த கண்களைக் கசக்கியபடிச் சுற்று முற்றும் பார்க்கிறேன்.

வானிலிருந்து இறங்கிக் கொண்டே வரும் இரவின் திரைக்குப் பின்னால், இருளின் பெரும் திரட்சியாய், கோபமான எச்சரிக்கையாய், எதற்கோ காவலாய், கரடிமலை சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது.

என்னைச் சுற்றி வயல்களில், பயிர்களின் பச்சையில் இரவில் கறுப்பஞ்சாறு வழிகிறது.

என்னெதிரே ஒற்றையடிப் பாதை வெறிச்சாய் ஓடுகிறது. நான் தனி.

மலைமேல் ராப்பூரா திருவேலநாதரின் தனிமையை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது.

'நானி'ன் மாறாத, மட்டற்ற, மெளனத்தின் தனிமை.

சக்கு, நீ எப்படி, ஏன், அப்படி நள்ளிரவில் மலையேறி அந்தத் தனிமையில் கலந்தாய்?

"ஆண்டவனே என்னைக் கைவிட்டாயே!” என்று அவனிடம் முறையிடவா?

“Eli, Eli lsama sabachtha-ni?”

உன் துயரம் உன் சிலுவையை நீயே சுமந்து மலையேறிச் சென்று, நீ விட்ட உயிர் யாருக்கும் குன்றிலிட்ட தீபமாயிருக்கட்டும் என்றா?

கரடிமலையின் கோபமூச்சுப் போல் திடீரெனக் காற்று எழுந்தது. வயல்களில் கதிர்கள் திகிலில் சலசலத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/70&oldid=1127271" இலிருந்து மீள்விக்கப்பட்டது