பக்கம்:அபிதா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 0 லா. ச. ராமாமிருதம்


கொடுத்துட்டுப் போவான். சித்தி படம் பார்த்துட்டு நாளைக்குக் காலையிலேதான் வருவாள்.

அப்பா இன்னும் வரல்லேன்னா எப்போ வராரோ? ஒரொரு சமயம் வரவழியிலே திண்ணையில் சீட்டுக் கச்சேரி கண்டுட்டார்னா இப்படித்தான் - ராத்ரி பன்னிரண்டோ, மறுபகலோதான் .

ராச்சோறுக்கு அப்பாவின் கை நைவேத்ய மூட்டையை நம்பமுடியாது. அது வேளையில்லா வேளையில் ஜலம் விட்டு, சரியாகவும் ஊறாமல் மறுநாள் பழையதுக்குத் தான் சரி. சித்தியின் திட்டு, வெசவுக்கு கட்டுப்படற கட்டமெல்லாம் அப்பா எப்பவோ தாண்டியாச்சு. இத்தனைக்கும் தான் ஆடுவதாகவும் தெரியல்லே. பக்கத்துக் கையைப் பார்த்துண்டிருக்கிறதுலே என்ன அவ்வளவு சுவாரஸ்யமோ? எங்களுக்கென்ன தெரியும்? உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கும் தெரியாதா? சரி, உங்களை நிக்க வெச்சுட்டு நான் என்னத்தையோ பேசிண்டிருக்கேன். உக்காருங்கோ ஒரு பிடி களைஞ்சு வெச்சுடறேன். நிமிஷமா ஆயிடும்.”

கூடத்தில் குத்துவிளக்கு, கால் வெளிச்சமும் முக்கால் சாந்துமாக இழைத்த கலவையிலே அவள் நிறம் பளிச்சிடுகிறாள். நாகப்பழம் போல் விழிகள் கறுகறுவென உள்ளத்தைத் துருவுகின்றன.

பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு
வாலைச் சுழற்றிக்கொண்டு
தரையில் கால் பாவாமல்
பரபரத்துக் கொண்டு
மொழு மொழுவெனப் புத்தம்புதிது
கடிவாளம் இன்னும் விழாத கன்னிவாய்
வெள்ளைக் குதிரைக் குட்டி.

இன்று முழுதும் அதன் துள்ளல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/72&oldid=1127277" இலிருந்து மீள்விக்கப்பட்டது