பக்கம்:அபிதா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 67


“உங்களுக்கென்ன பிடிக்கும் சொல்லுங்கோ, பருப்புத் துவையலரைக்கட்டுமா? துவையலரைச்சு சீரக ரஸம்? ரஸம் எனக்கு நன்னாப் பண்ணவரும். இல்லை, கூடையில் நாலு கத்தரிக்காய் கிடக்கு. அப்படியே எண்ணெயில் வதக்கட்டுமா? சிவப்புக் கத்தரிக்காய். இல்லே இரண்டுமே பண்ணட்டுமா? என்ன, எல்லாத்துக்குமே சும்மா இருக்கேள்? மனசுக்குள்ளே சிரிப்பாயிருக்கா? அதென்னவோ வாஸ்தவந்தான். ராத்ரி அனேகமா மோருஞ்சாதம்தான். ஏதோ உங்கள் சாக்கில் எங்களுக்குந்தான் வெச்சுக்கோங்கோளேன். ஆனால் அது பெரிசு இல்லை. பண்ணிப் போடுவதில் எப்படியும் ஒரு சந்தோஷம் இருக்கே! அதுக்காகன்னு வெச்சுக்கோங்கோளேன். ஏது நீங்கள் எல்லாத்துக்குமே கம்முனு இருக்கறதைப் பார்த்தால் எதைப்போட்டாலும் சாப்பிடத் தயார் போலிருக்கே! அதற்காக நான் எதையேனும் போடமாட்டேன். அப்பாவே திட்டுவா. சரி எனக்குத் தோணினதைப் பண்ணறேன். நீங்கள் திண்ணையில் கொஞ்ச நேரம் காத்தாட உட்காந்திருங்கோ. இலையைப் போட்டு நான் கூப்பிடறேன்.”

அபிதா, என்னைத் திண்ணைக்குப் போகச் சொல்லாதே. தசரதன் கெஞ்சின மாதிரி உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். அபிதா, அடியே கைகேசி, அது மாத்திரம் கேளாதடி. நான் அபிதாவைப் பார்த்துக் கொண்டேயிருக்கணும். திண்ணை வேண்டாம். நினைத்தாலே தொண்டை வரள்றது.

நினைத்ததை நினைந்ததும் தொண்டை உலர்ந்தது என்று உணர்ந்ததும் தொண்டை உலர்ந்தது.

“குடிக்கத் தீர்த்தம் கொடேன்.”

பூமியில் கிழித்த கோட்டினின்று தற்செயலில் எழுந்து பூக்கொட்டும் ஜலமத்தாப்புப் போல் அவள் உருவம், கூடத்தில் இறக்கிய குடத்தை நெருங்குகையில் அவள் எனக்குப் பதுமையாயிருக்கிறாள், வியப்பாயிருக்கிறாள். விக்ரஹம் உயிர்த்ததுபோல் பயம் தருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/73&oldid=1127280" இலிருந்து மீள்விக்கப்பட்டது