உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6.8 O லா. ச. ராமாமிருதம்

மூச்சை மூச்சென்று உணர்ந்து மூச்சை மூச்சாக ஒரு கணம் சிந்தித்தாலே மூச்சு திணறுகிறது.

கண்ணைப்பெற்ற திருதராட்டிரன்போல் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன். பெற்ற பார்வையை இழக்க மனமில்லை. பட்ட தரிசனம் காணவும் திடமில்லை.

கண்களை மெதுவாய்த் திறக்கிறேன்.

எதிரே, தம்ளரை என்னிடம் நீட்டியவண்ணம், தன் புன்னகையின் திவ்யத்தில் ஒளி வீசிக்கொண்டு நிற்கிறாள்.

தம்ளரை வாங்கிக் கொள்கையில், என் விரல் அவள் மேல் படாதா?

No.

எண்ணத்தையும் செயலையும் இம்மியிலிருந்து எல்லை வரை, நம் அறிவுக்கெட்டாது தன் வழியில் ஆளும் ஆதிக்கத்தின் கட்டளையில், பாத்திரம் கைமாறும் தருணம், எங்கள் விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டாற்போல் எவ்வளவு நெருக்கமாய் தம்ளரைப் பற்றியும் -

தொட்டுக் கொள்ளவில்லை.

அவள் ஏந்தி வந்த ஜலமே, அவள் கன்னித் தூய்மையைத் தன் சத்தியத்தின் சக்தி கொண்டு, அவளுக்குக் காப்பாற்றித் தருவதாய் எனக்குத் தோன்றுகிறது.

கானலின் நலுங்கல் போல் என் ஏக்கம், கண்கூடாய் என்முன் எழுகிறது. பற்று ஒன்றின்மேல் விழுந்து விட்டால்-

பற்று, ஆசை, அன்பு, பாசம், பக்ஷம், காதல், காமம், வேகம், விரகம், ஏக்கம், இன்பம், வேதனை, சோகம், சுகம், சொர்க்கம், நரகம், உயிர், ஊசல், கூடல், பிரிதல் இன்னும் எத்தனை எத்தனையோ.

அத்தனையும் ஒரே சாயம் பிடித்துக்கொண்ட கெட்டியின் ரகங்களைக் காட்டும் பெயர்கள்தானே! பற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/74&oldid=1127285" இலிருந்து மீள்விக்கப்பட்டது