2 ◯ லா. ச. ராமாமிருதம்
பாலத்தடியில் உருவிவிட்ட ஜல ஜரிகையின் தகதகப்பு, 'திடும் திடும்' என அதிர்ந்துகொண்டு எங்களைக் கடக்கும், பாலங்களின் இரும்புத் தூலங்கள்-
-இத்தனையும் கோர்த்து ஊடுருவிய உள்சரடாய் வண்டியின் பெருமூச்சு; ஒரு சமயம் அதன் ஊதல் உவகை பின் எக்காளம்: ஒரு சமயம் வேகத்தின் வெற்றிப்பிளிறு; மறு சமயம் அது இழுத்துச் செல்லும் சிறு உலகத்தின் சுமை கனத்தினின்று இழுத்த பாகாய், அது செல்லுமிடம் சேரும் வரை, அதன் கர்ப்பத்தில் தாங்கிய அத்தனை மக்களின் அவரவர் விதியின் தனித்தனிக் சஞ்சலங்கள், பிரிகள் ஒன்று திரித்த ஓலக்குரல் தீனக்குரல்-
சாவித்ரி முகம் பூரா விழிவட்டம்.
முந்தாநாளிரவிலிருந்தே பச்சைக் குழந்தைமாதிரி ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டாள். “” அவளைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது. அடக்கிக் கொள்கிறேன். வலது பொட்டில் அடை நரை தோய்ந்திருக்கிறது. (நரையை ஒப்புக்கொள்ள மாட்டாள். "பூசனிக்காய் நறுக்கிய கையோடு நினைவு மறதியா தொட்டுண்டுட்டேன்." இன்னொரு சமயம் அதுவே தேனைத் தொட்ட கையாக மாறிவிடும்). கொஞ்ச நாளாவே இடது கண்ணில் நீர் வடிகிறது. கண்ணாடி போட்டுக் கொள்ள மறுக்கிறாள். முகம் கெட்டுவிடுமாம்.
“அப்படி ஒரு கண் அவிஞ்சு போனால் இன்னொண்ணு இருக்கு. அதுவும் போச்சுன்னா, கையைப் பிடிச்சு, அழைச்சுண்டு போய், 'இதுதாண்டி தாஜ் மஹால்', 'இதுதான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்', இதுதான் அகண்ட காவேரி', 'இதுதான் நம் பூர்வீகம், சொந்த மண்ணத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கோ, வாயில் கூட கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கோன்'னு அப்புறமாவது இடம் இடமா அழைச்சுண்டு போய்க் காண்பிக்க நீங்கள் இருக்கேள் இல்லையா? அப்படி ஒரு