பக்கம்:அபிதா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 O லா. ச. ராமாமிருதம்

யும். அப்பவும் அந்தத் தெளிந்த நிலையும் ஒரு தெளிந்த நிழலன்றி வேறில்லை என்று என்ன நிச்சயம்?

இந்தத் தர்க்க ரீதியில் அதோ வானளாவி நிற்கும் கரடிமலையும் ஒரு நிழல்தான்.

அன்று ஜன்னல் கண்ணாடியில் ஒழுகி வழிந்த மழை நீரை சகுந்தலையின் கண்ணீர் தாரையாகக் கண்டு நம்பி வந்ததும் ஒரு பிம்பம்தான்.

திரும்பத் திரும்பக் கரடி மலைக்கும் குருக்கள் வீட்டுக்கும் இடை தூரத்தை நடந்து நடந்து, அளந்து அளந்து, இங்கு நான் இருந்தவரை ஞாபகத்திலும், இங்கு விட்டுச் சென்ற பின் கற்பனையிலும் சகுந்தலையின் நடமாட்டங்களையும் சுவடுகளையும் தேடி அலைகிறேன்.

சகுந்தலை செத்துப் போனாள்.

செத்துப் போனவளைப் பொசுக்கிய சாம்பல்கூட கரைந்தும் காற்றில் பறந்தும் போயாச்சு. இத்தனை வருடங்களுக்குப்பின் இங்கு வந்த முட்டாளே, இன்னும் எதைத் தேடுகிறாய் அதைவிட முட்டாளே?

இந்த நிகழ்ச்சியும் என் பகுத்தறிவு என்னைக் கேட்கும் இந்தக் கேள்வியும் உண்மையின் ஒரு முகமாயிருக்கலாம். ஆனால் சகுந்தலையைப் பற்றிய நினைவின் சரடு அதனால் அற மறுத்தது. அதன் உரம் சகுந்தலையின் சாவையும் தாண்டி நாண் தொடர்ந்து சகுந்தலையை இன்னும் இங்கேயே தேடுகிறது. இந்த இரக்கமற்ற, தவிர்க்க முடியாத தொடர்பு, தூண்டுதல், துரத்தல் என்ன? முற்றுப் புள்ளியை ஏற்றுக் கொள்ளாத தன்மைதான் என்ன?

என்னத்தையோ எழுதி, எழுதியதைப் படித்து, படித்ததை நினைத்து, படித்ததை வாழ்ந்து, வாழ்ந்ததைப் படித்து, அனுபவத்தை நினைத்து, நினைத்ததையே நினைந்து, நினைவை அவ்வப்போது காயப்படுத்தி, காயத்திலிருந்து சொரியும் ரத்தம் உணர்ந்து, அர்த்தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/84&oldid=1127341" இலிருந்து மீள்விக்கப்பட்டது