பக்கம்:அபிதா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82 0 லா. ச. ராமாமிருதம்


அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்னைக்கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனான். தோப்புக்குச் சொந்தக்காரனை அவனுக்குத் தெரியாதா என்ன? உடனே கோபம். உடனே அலக்ஷியம், உடனே சிரிப்பு அவன் கண்களில் சிந்தின. மேட்டு விழிகள், குத்து மீசைக்காரன். வாயினின்று வெடித்த சிரிப்பில் வாயெல்லாம் செக்கச் செவேல்,

“ஏன் சாமி? நீ பாவம் பார்த்து ஒரு உசிரைக் காப்பாத்திட்டதா நினைப்பா? இன்னிக்கு தப்பிச்சு, சரி. நாளைக்கு? நாளைக்கு என்ன பண்ணப் போறே? இதே நேரத்துக்கு அது இங்கே வந்து குந்தும்னு எண்ணிறியா? இல்லே இங்கே வந்தே நான் அதைக் காவு வாங்கப் போறேன்னு நெனக்கிறியா? நீ ஊருக்குப் புதிசு. நான் இங்கேயே பொறந்து, இதே புளைப்பா இங்கேயே வளந்தவன். இதுங்களை எனக்குத் தெரிஞ்ச மாதிரி உனக்குத் தெரியுமா? இதுலே எதுக்கேனும் மாரிலே மச்சம் இருந்தால், அந்த மச்சம் முதல் எனக்கு நல்லா தெரியும். இன்னிக்கில்லாட்டி நாளக்கி. நாளைக்கில்லே, அதுக்கு மறுநாள். எனக்கு இஷ்டமானதை கல்லாலோ வில்லாலோ அடிச்சுத் தள்ளிடுவேன். கையாலே கூட கழுத்தை முறிச்சுப் போட்டுடுவேன். ஹாஹ்ஹாஹா அன்னன்னிக்கு என்ன கிடைச்சுதோ- காடையோ, கவுதாரியோ, பாம்போ, ஒணானோ, பன்னிக்குட்டியோ, நரியோ, முசலோ- ஏதோ ஒண்ணு. உசிர் எல்லாம் ஒண்ணுதானே!”

இவன் என்ன மூச்சு விடாமல் ஆனால் விஷயம் விடாமல், ஸம்ஹாரமூர்த்தியின் பாஷை 'எல்லாம் என்னுடையது'- பேசுகிறான்! சக்கரம் அறுக்கிறது. கபாலம் ஏந்துகிறது என்கிறானே? இவன் வாழ்க்கை மட்டுமல்ல, இவன் வேட்டையாடும் உயிரின் நியதியில், இவனுக்கும் அதற்கும் இடையில் உள்ள உறவில், உரிமையில் நான் தலையிட்டேன் என்கிறான். அப்படித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/88&oldid=1127371" இலிருந்து மீள்விக்கப்பட்டது