பக்கம்:அபிதா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 O லா. ச. ராமாமிருதம்


“என்ன முணுமுணுக்கிறாய்? வயதா? அதென்ன வயது? ஒண்ணு, ரெண்டு, மூணு என்று உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உங்கள் அழுக்கை உருட்டி உருட்டி நீங்கள் மணியாய் ஜபிக்கும் அழுக்குருண்டைதான்.”

ஜலத்தைக் கையில் அள்ளுகிறேன். எல்லாம் விரலிடுக்கில் வழிந்து போகிறது: உள்ளங்கையில் மட்டும் ஆசமன அளவிற்கு ஒரு மணி உருண்டு வெய்யிலில் சுடர் விடுகிறது. என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

அபிதா.

உன் உள்ளங்கையில் நான் குந்து மணி.

புலிக் கோடுகள்போல் மின்னல், கண்டசதையை, தொடைகளை, விலாவில், நெற்றிக்குள், புருவமத்தியில், பளிச், பளிச் வெய்யில் பிடரியில் தேளாய்க் கொட்ட ஆரம்பித்துவிட்டது. நேரமாகிவிட்டது.

இவ்வளவு தூரம் வந்ததற்கு இங்குக் குளித்துவிட்டுப் போகலாம். வீட்டுக்குப் போனால், அந்த வேலையும் நேரமும் மிச்சமாகும். நேரே இலையில் உட்கார்ந்து விடலாம்.

ஆனால் ஜலத்தின் அமைதியைக் கலைக்க மனம் வரவில்லை. காற்றில் அதன் விளிம்பில் அதிரும் லேசான விதிர் விதிர்ப்புகூட ஏதோ தூக்கத்தில் மூச்சுப்போல்தான் தோன்றிற்று. கலைக்க மனமில்லை. தூங்குவதைத் தட்டியெழுப்ப தைரியமில்லை. திரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/92&oldid=1130521" இலிருந்து மீள்விக்கப்பட்டது