பக்கம்:அபிதா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

“இதைப் பார்த்தேளா? அபிதாவுக்கு எது கட்டினாலும் ஏர்வையாயிருக்கு! புடவை சாயம் சோகையாப் போயிட்டாலும் அவள் உடம்பில் அது மெருகு காட்டறது. சிவப்பாயிருந்தால் மட்டும் போதாது. சிவப்பாயிருந்தாலும் சில கலர்கள்தான் பொருந்தும். ஆனால் இந்தக் குருக்களாத்துப் பெண்ணின் நிறவாகே தனி. எந்தப் புடவைக்கும் இழைஞ்சு கொடுக்கிறது. எனக்கு இதுதான் புரியல்லே. இவள் மாதிரி இருக்கவாள் எல்லாம் ஏன் இந்த மாதிரி இடத்தில் பிறக்கறா?

நான் அசுவாரஸ்யமாக ‘சூ’ கொட்டுகிறேன். அவளுடைய ஆச்சர்யமேதான் என்னுடைய ஆச்சர்யமும். ஆனால் ஆச்சர்யப்பட இவள் யார்? எனக்கு இப்படித் தோன்றுவது அடாது. தெரிகிறது. ஆனால் தோன்றுகிறதே!

“ஆமாம் இங்கே நாம் இன்னும் எத்தனை நாளைக்கு டேரா?”

சாவித்ரி வாயைத் திறந்தாலே எனக்கு எரிச்சல் எழுகிறது. பல்லைக் கடிக்கிறேன்.

“ஏன், எத்தனை நாள் இருந்து விட்டோம், உனக்கு, அதற்குள் அலுத்துப் போகும்படி?”

“எனக்கு அலுத்துப் போவது இருக்கட்டும்- இங்கே பொழுது போவது சிரமமாத்தானிருக்கு- இவாளுக்கு அலுத்துப் போகாமல் இருக்க வேண்டாமா? இவாளுக்கு நம்மைச் சமாளிக்கிறது யானையைக் கட்டித் தீனி போடறாப்போலேன்னா?”

அவளை, பிறகு, என்னை, ஒருமுறை அவள் காணக் கண்ணோட்டம் விட்டுக் கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/93&oldid=1130524" இலிருந்து மீள்விக்கப்பட்டது