பக்கம்:அபிதா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88 0 லா. ச. ராமாமிருதம்


“எப்படியும் நான் யானையில்லை.”

சாவித்திரி விடுத்த பார்வையில் என் கணை மொக்கை பட்டு வீழ்கிறது. அதில் அவ்வளவு அலக்ஷியம், ‘சீ, நீ இவ்வளவு மட்டமா?’ எனும் மோன ஆச்சரியம். ‘உன்னைச் சட்டை செய்து உன்னைப் பதிலுக்குப் பதில் ஏசி உன்னிலும் கீழ்மைக்கு நான் இறங்கப் போவதில்லை’ எனும் பதிலும்கூட, என்னை அவமானப்படுத்தும் பொறுமையைச் சாதித்துத் தன் தரத்தை உரப்படுத்திக் கொண்டு, என் சிறுமையை எனக்கு உறுத்துகிறாள்.

வெற்றிக் கிறுக்கு பிடித்தது. அது யார் பக்கம் என்று கடைசிவரை சொல்வதற்கில்லை. இருவரில் ஒருவருக்கு அது கட்டாயம் துரோகம் செய்தே ஆகவேண்டும்.

ஙண ஙணவென மணிகளின் ஒசை- பெரிதும் சின்னதுமாய் ஒன்று கலந்து எங்களை எட்டுகின்றன. என் நெஞ்சில் பழைய படங்களை எழுப்புகின்றன.

“போகணும் போகணும்னு பறக்கறையே உங்கள் ஊரில் இதெல்லாம் கண்டிருப்பையா? வா, வந்துபார். இத்தனை நாள் உன் பிறந்த வீட்டில் நான் இருந்தாச்சு. கொஞ்ச காலமாவது நான் வளர்ந்த இடத்தில் நீ இருக்க வேண்டாமா?”

பாதி கடுப்பு, பாதி கேலியாகப் பேச்சை மாற்றுகிறேன்.

வீட்டுக்குப் பின்னால், மைதானத்தில் மாடுகள் மந்தை கூடுகின்றன. பெரிய மந்தைதான். சுற்று வட்டாரத்துப் பேட்டைகள், குக்கிராமங்களிலிருந்தும் மாடுகள் வந்து சேர்கின்றன. மாட்டுக்காரப் பையன் உருவம் கூடச் சரியாகத் தெரியவில்லை. அவ்வளவு நெரிசல், அவ்வளவு புழுதி.

   “ஓஹோ? பட்டணத்தானின் பட்டிக்காட்டு ப்ரவேசமோ?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/94&oldid=1130525" இலிருந்து மீள்விக்கப்பட்டது