பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

75

ஒருகாலும் எழுந்தருளாதவளை, விளங்குகின்ற நுண்ணிய நூலைப்போன்ற திருவிடையை உடையவளை, எங்கள் பெருமானாகிய சிவபிரானது இடப்பாகத்தில் வீற்றிருப்பவளை, இனி இந்த உலகத்தில் என்னை மீட்டும் படையாமல் இருக்கப்போகிறவளை, உங்களையும் இனிப் படையாத வண்ணம் தரிசனம் செய்து கவலையற்று இருங்கள்.

பட்டுடையாள் : 37. மதிச்சடையாள் : 71.

இதன்கண் அடிதோறும் மடக்கு வந்தது.

84

பார்க்கும் திசைதொறும் பாசாங்
குசமும் பனிச்சிறைவண்
டார்க்கும் புதுமலர் ஐந்தும்
கரும்பும்என் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரை யாள்திரு
மேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலை யும்முலை
மேல் முத்து மாலையுமே.

(உரை) அடியேனுடைய துக்கங்களை யெல்லாம் போக்குகின்ற திரிபுரசுந்தரியின் திருக்கையில் உள்ள பாசாங்குசமும், குளிர்ச்சியைப் பெற்ற சிறகையுடைய வண்டுகள் முழங்கும் புது மலர்களாகிய ஐந்து அம்புகளும், கரும்பாகிய வில்லும், அவள் திருமேனியும், சிறிய திரு விடையும், கச்சை அணிந்து குங்குமக் குழம்பு பூசிய நகில்களும், அவற்றின்மேல் அணிந்த முத்து மாலையும் பார்க்கும் திசைதோறும் தோன்றும்.

தோன்றும் என்ற ஒரு சொல்லை அவாய் நிலையால் வருவித்து முடிக்க. முலையும் முத்துமாலையும்: "திருத்தன பாரமும் ஆரமும்" (9).

85