பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

அம்பிகையின் திருக்காட்சியாலும் அவள் அருளிச் செய்த இன்மொழியாலும் தம்மை மறந்து பேரின்ப வாரிதியில் ஆழ்ந்து நின்ற பட்டர் அந்த ஆனந்தாதிசயத்தை "கூட்டியவா என்னை” என்ற 80ஆவது பாடலிற் புலப்படுத்தி மேல் இருபது பாடல்களைப் பாடி நிறைவேற்றி இறுதியில் ஒரு பயனும் இயற்றினார். ' அந்த இரவில் அம்பிகையின் திருத்தோடு வானத்தில் ஒளி விடுவதைக் கண்டு சரபோஜி அரசரும் பிறரும், அமாவாசையை அடுத்த பிரதமையாகிய இன்று பூரண சந்திரன் உதயமாயிற்றே! அற்புதம், அற்புதம்" என்று வியப்புற்றார்கள்; இது அம்பிகையின் திருவிளையாடல்; தன் அடியார் வார்த்தையை மெய்ப்பிக்கும் பொருட்டு இயற்றிய அற்புதம்" என்று தெளிந்தனர். பிறகு மன்னரும் பிறரும் அபிராமிபட்டரை அணுகி அடிவிழுந்து பணிந்து, "நாங்கள் செய்த குற்றத்தைப் பொறுக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தனர். அரசர் முன்பு சொன்ன மானியத்தை என்றும் பரம்பரை பரம்பரையாக அனுபவித்துக் கொள்ளும்படி பட்டருக்கு வழங்கினர்.

இவ்வரலாற்றின் உண்மை யாதாயினும், சரபோஜி அரசர் முதலில் அபிராமிபட்டரின் பெருமையை உணராமல் அசட்டையாக இருந்தாரென்றும், பிறகு அவர் உணர்ந்து கொள்ளும்வண்ணம் ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது என்றும் நாம் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

சரபோஜி மன்னர் இந்த அன்பரிடம், “இன்று முதல் தங்களுக்கு அபிராமி பட்டர் என்ற திருநாமமும், தங்கள் பரம்பரையினருக்குப் பாரதியார் என்ற பட்டமும் வழங்குவனவாகுக” என்று கூறினர் என்பர்.