பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அபிராமி அந்தாதி

மாற்றாளாகிய அவளைக்கண்டு பின்னும் ஊடல் அம்பிகைக்கு மிகும்; ஆதலின் இறைவர் அவ்விரண்டையும் மறையச் செய்தனர்.

98

குயிலாய் இருக்கும் கடம்பா
டவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயா
சலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்
கமலத்தின் மீதன்னமாம்
கயிலா யருக்கன் றிமவான்
அளித்த கனங்குழையே.

(உரை) கயிலாய மலையாளராகிய சிவபிரானுக்குப் பழங்காலத்தில் இமவான் திருமணம் செய்துகொடுத்த கனத்தையுடைய பொற்குழையை அணிந்த தேவியானவள், கடம்ப வனத்தில் குயிலாக விளங்குவாள்; இமாசலத்தில் அழகும் பெருமையும் உடைய மயிலாக இருப்பாள்; வானத்தின்மேல் வந்து உதித்த சூரியனாக இருப்பாள்; தாமரையின்மேல் அன்னமாக எழுந்தருளியிருப்பாள்.

குயிலைப்போல விளங்குவாளென உவம வாசகம்படச் சொல்லுதலும் பொருந்தும்.

99

குழையத் தழுவிய கொன்றையந்
தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்
தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்
பாணமும் வெண்ணகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப்
போதும் உதிக்கின்றவே.

(உரை) குழையும்படி தன்னைத் தழுவிய சிவபிரானது திருமார்பின் மாலையாகிய கொன்றையின் மணம் வீசுகின்ற