பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XII



"மருட்டுயர் தீர அன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவின்வெங் கூற்றம் பதைப்ப உதைத்துங்கனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே"

என்பது முதலிய தேவாரத் திருப்பதிகங்களில் திருநாவுக்கரசர் இவ்வீர விளையாட்டைப் பாராட்டுகின்றார்.

இங்கே எழுந்தருளியுள்ள விநாயகர் திருநாமம் கள்ளப் பிள்ளையார் என்பது; கள்ள வாரணப் பிள்ளையாரெனவும் வழங்கும். குங்கிலியக்கலய நாயனாரும், காரி நாயனாரும், உய்யவந்த தேவரும் அவதரித்த தலம் இதுவே.

இத் தலத்தின் ஆலயம் திருக்கைலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தின் பாதுகாப்பில் உள்ள கோயில்களுள் ஒன்று.

இங்கே எழுந்தருளியுள்ள அபிராமியம்பிகை மிக்க சக்தி பெற்ற மூர்த்தி. தேவர்கள் அமுதம் பெற இத் தேவியின் திருவருளும் இன்றியமையாமல் இருந்தமையின் இந் நூலில் ஆசிரியர், “விண்மேவும் புலவருக்கு, விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே!” (90) என்று பாராட்டுகின்றார். இத்தலத்தில் அடியார்களாகிய மனிதரும், அமுதம் வேண்டிய தேவரும், மார்க்கண்டேயர் முதலிய, முனிவரும் வழிபட்டதை எண்ணியே "மனிதருந் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி - குனிதருஞ் சேவடிக் கோமளமே" (4) என்று போற்றுகின்றனர்.. மாயா முனிவர் என்றது 'காலன்கைப்பாசத்திற் படாமல் சிரஞ்சீவியாக மரணமின்மை பெற்ற மார்க்கண்டேய முனிவரையென்றே கொள்ளலாம்.

கூற்றம் குமைத்த குரைகழற் காலையுடைய கடவூர் எம்பெருமானும் அபிராமியம்மையும் தம்முள் வேறல்லவராகையால், கால பயமின்றிச் செய்யும் திருவருட்