பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xix

திருமகளாகவும் இருப்பவர்கள் அவளுடைய சத்தியமிசங்சளே யாவர். புவனம் பதினான்கையும் பூத்துக்காத்துக் கரக்கும் அப் பராசக்தி பிறப்பும் இறப்பும் அற்றவள்.

இமயவரையன் மகளாகத் திருவவதாரம் செய்தவள்; மகிடன் தலைமேல் நிற்பவள்; பிரம கபாலம் தரிப்பவள்; முகுந்தற்கு இளையவள்; கறைக் கண்ட னுக்கு ஒரு வகையில் மூத்தவள்; ஒருவகையில் அன்னையும் ஆவாள்.

எம்பெருமானுடன் ஒன்றியும், தனியே இணைந்தும் அம்மை செய்யும் ஆடல்கள் சொல்லத் தரமோ? சிவத்திற்கும் சக்திக்கும் பேதமில்லை யென்பதை நன்கு உணர்ந்த இப் பெரியார், "சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும்” ஆக அம்பிகையை வழிபடுகிறார். சொல்லும் பொருளுமென நடராசப் பெருமான் அருகில் ஒன்றி இருப்பாள் தேவி; திருமணக் கோலத்தில், இறைவருடன் வீற்றிருப்பாள்; அவருடைய ஒரு கூற்றை மெய்யினின்றும் பறித்துக் குடிபுகுவாள்; மன்மதனை எரித்த அப்பெருமானுடைய அழியா விரதத்தை ' அண்ட மெல்லாம் பழிக்கும்படி அவர் பாகத்தைக் கொண்டு அச்செயலால் அவர் மதியை வவ்வி, ஒரு மகனும் அவருக்கு உண்டாகும்படி செய்த வல்லபமுடையாள்; அப் பிராட்டியின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு இறைவர் பணிந்து அவளது சரணாரவிந்தத்தை முடிக் கண்ணியாகச் சூடுகின்றார். அப்போது அவளுடைய கோபம் மிகாதிருக்கும் பொருட்டுத் 'தம்' கரத்திலுள்ள அக்கினியையும், சிரத்திலுள்ள கங்கையையும் அவர் கரந்து விடுகிறார். இங்ஙனம் அருள் விளையாடல் புரியும் அவ்விருவரும் ஒருங்கே வந்து திருவருள் புரிதலை இவ்வாசிரியர் பல இடங்களில் சொல்கிறார்:

"புனிதரும் நீயுமென் புந்தியெந்நாளும் பொருந்துகவே" (4)
"உமையும் உமையொரு பாகரும ஏக உருவிலவந்தின்
கெமையும் தமக்கன்பு செய்யவைத்தார்" (34)