பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xx

"புண்ணியஞ் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக்
கண்ணியுஞ் செய்ய கணவருங் கூடிகம் காரணத்தால்
நண்ணியிங் கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநஞ் சென்னியின் மேற்பத்மபாதம் பநித்திடவே” (41)

"......... நின் துணைவரும் நீயும் துரியமற்ற
உறக்கந் தரவந் துடம்போ டுயிருற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன் னேவரல் வேண்டும்."(89)

அபிராமியின் தொண்டர்கள் ஆகமபத்ததியை ஓர்ந்து மறை சொல்லியவண்ணம் தொழுது வாழ்த்தும் இயல்புடையவர்கள்; அவர்களுக்கு ஒரு தீங்கும் இல்லை; அவர்களுக்குத் தனம், கல்வி, தளர்வறியா மனம், தெய்வவடிவு, வஞ்சமில்லா இனம், இன்னும் நல்லன எவை உண்டோ அவை எல்லாம் அபிராமியின் கடைக் கண்கள் தரும்; ரத கஜ துரக பதாதிகள், மகுடம் சிவிகை, கனகம் ஆரம் முதலிய சின்னங்களைப் பெற்ற அரச பதவியைப் பெறுவார்கள்; அவர்கள் படையாத தனமே இல்லை; இந்திர பதவியும் பெற்று வானுலக இன்பம் அத்தனையும் அடைவர். பிறகு வீட்டையும் அடைவர்.

இறைவியின் திருவருளால் மெய்ஞ்ஞானம் பெற்ற அவர்கள் தவம் முயன்று யமவாதனையினின்றும் நீங்குவார்கள்; பிறவி வேரை அறுத்துவிடுவார்கள். அச் சிவஞானிகள் 'எமதெல்லாம் உனதே' என்று எல்லாவற்றையும் அம்பிகைக்கே அர்ப்பணஞ் செய்துவிட்டுத் தன்னந் தனியிருந்து விழிநீர் மல்கிப் புளகமரும்பித் ததும்பிய ஆனந்தமாகித் தேனில் விழுந்த வண்டு போலத் தேவியின் திருவருள் விலாசப் பரவெளியில் அமுதுண்டு கிடப்பர். அவர்கள் எது செய்தாலும் அதுவே தவமாகிவிடும்.

இத்தகைய தொண்டர்கள் கூடிய அவையத்தைப் பகலிரவாக நண்ணியவர் அபிராமிபட்டர்; அவர்களுடன்