பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxiv

என்று பாராட்டிப் பேசுவது காண்க. தாம் இன்பம் பெறுவதற்குக் காரணமான நெறியை இவர் உயர்த்தி வற்புறுத்திக் கூறுவது இயல்பே.

"கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல்
லாதன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன பரச மயம்விரும்
பேன்வியன் மூவுலகுக்
குள்ளே அனைத்தினுக் கும்புறம்
பேஉள்ளத் தேவிளைந்த
கல்ளே களிக்கும் களியே
அளியஎன் கண்மணியே"

என்று வீறுபெறப் பேசவைத்த சமயம் இவர் சமயம்.

இந் நூலின்கண் தில்லை, சீகாழி, திருவெண்காடு, காஞ்சிபுரம், மதுரை என்னும் திருத்தலச் செய்திகள் வருகின்றன. சிவபிரான் தில்லையிலும் திருவெண்காட்டிலும் நடனம் செய்தருளியதும், அம்பிகை சீகாழியில் திருஞான சம்பந்தருக்குப் பால் அருத்தியதும், காஞ்சிபுரத்தில் சிவபெருமான் திருமேனி குழையத்தழுவியதும், இருநாழி நெல் கொண்டு அறம் வளர்த்ததும், மதுரையில் கடம்ப வனத்தில் எழுந்தருளியிருப்பதும், ஆகிய வரலாறுகள் இந் நூலில் சுட்டப் பெறுகின்றன. தேவார திருவாசகக் கருத்தும் சொல்லும் சில சில இடங்களில் உள்ளன.

பரம்பரையாக வேதநெறியில் ஒழுகும் குடும்பத்திற் பிறந்த இவ்வாசிரியர் வேதத்திலும், ஆகமத்திலும், லலிதா ஸஹஸ்ரநாமம் முதலிய தேவீ பரமான கிரந்தங்களிலும் உள்ள கருத்துக்களை அங்கங்கே எடுத்தாண்டிருக்கிறார்.