பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அபிராமி அந்தாதி


காப்பு


(கட்டளைக் கலித்துறை)

தாரமர் கொன்றையும் சண்பக
மாலையும் சாத்தும்தில்லை
ஊரர் தம் பாகத் துமைமைந்த
னேஉல கேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதிஎப்
போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக் கணபதி
யேநிற்கக் கட்டுரையே.


(உரை) மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லையெம்பெருமானுக்கும், அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந் தருளுவாயாக.