பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அபிராமி அந்தாதி

மரத்தின் கிளையும், முடிவில் உள்ள கொழுந்தும், கீழே பதிந்த வேரும், குளிர்ச்சியையுடைய மலரம்புகளையும், கரும்பு வில்லையும் மெல்லிய பாசாங்குசத்தையும் திருக்கரத்தில் ஏந்திய திரிபுரசுந்தரியே ஆகும் உண்மையை யாம் அறிந்தோம்.

துணை முதலியவற்றை, எல்லா உயிருக்கும் துணையென்பது முதலாகக் கொள்ளுதலும் பொருந்தும். தொழும் தெய்வம்-வழிபடு கடவுள். கொழுந்து: “பழமறையின் குருந்தே வருக" (மீனாட்சி. வருகை. 10). பணை-வேதசாகைகள், கொழுந்தென்றது வேதாந்தமாகிய உபநிடதங்களை. வேர் என்றது வேதத்துக்கு மூலமாகிய பிரணவத்தை வேதத்துக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானம் எனலுமாம்; “வேத ஜனனி" (லலிதா ஸஹஸ்ரநாமம், 338) என்பது, அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. "அருமறைக்கு, முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்வி" (55) என்பர் பின். பாசாங்குசம், பூங்கணை, கருப்புச்சிலை; (85), பயன்.

2

அறிந்தேன் எவரும் அறியா
மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்
கேதிரு வேவெருவிப்
பிறிந்தேன்நின் அன்பர் பெருமைஎண்
ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநர குக்குற
வாய மனிதரையே.

(உரை) அருட்செல்வம் உடையாய், வேறு யாரும் அறியாத இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியினிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன்.