பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

5

நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா நன்மைகளையும் கூட்டுவிக்கும் என்ற உண்மையை அறிந்தேனென்பார், மறையை அறிந்தேன் என்றார். மறை-அம்பிகையின் மந்திரமும் ஆம். செறிதல்-புகலாகப் புகுதல்; இடைவிடாது தியானித்தலுமாம். திரு: மகாலக்ஷ்மி (210) என்பது லலிதாம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. பிறிந்தேன் ! எதுகைபற்றி இடையின ரகரம் வல்லின மாயிற்று. கருமம்-இங்கே தீவினை.

3

மனிதரும் தேவரும் மாயா
முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமள,
மேகொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும்
பகீரதி யும்படைத்த
புனிதரும் நீயும்என் புந்திஎந்
நாளும் பொருந்துகவே.

(உரை) பூவுலக வாசிகளாகிய மனிதர்களும் பொன்னுலக வாணராகிய தேவர்களும் மரணம் இல்லாத பெருமையையுடைய முனிவர்களும் வந்து தலை வணங்கும் செம்மையாகிய திருவடிகளும் மெல்லியல்பும் உடைய தேவியே, கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடாபாரத்தின் மேல் பனியை உண்டாக்குகின்ற சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் கொண்ட தூயவராகிய சிவபிரானும் நீயும் என் அறிவினிடத்தே எக்காலத்திலும் இணைந்து எழுந்தருள்வீர்களாக!


மாயா முனிவர் தவத்தாலும் சித்திகளாலும் மரணம் ஒழிந்த முனிவர் மார்க்கண்டேயர் முதலிய இருடிகள்; தாபஸாராத்தியா (359) என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. கோமளம்-மென்மை; 33, குறிப்புப்பார்க்க:

4