பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அபிராமி அந்தாதி

அம்பிகை துர்க்கையென்றும் சாமுண்டியென்றும் வழங்கப் பெறுவாள்; மகிஷாசுரமர்த்தனி யென்னும் திருநாமம் காண்க; "கொதியாது கொதித்தெறிந்த கோட்டெருமைத் தலையின்மிசை, மிதியாத சீறடி மிதித்தன போற்றோன்ற" (பழம் பாடல்), நீலி - காளி. அழியாத கன்னிகை - கன்னிப் பருவம் என்றும் அழியாதவளெனலும் ஆம்; குமாரி என்ற திருநாமத்தை ஓர்க: "கனிகையுமை” (திருப்புகழ்),

”அகிலாண்ட கோடி யீன்ற, அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூப மயிலே" (தாயுமானவர் பாடல்), பிரமகபாலம் தரித்தவள்: “பலிகொள் கபாலி” (திருப்புகழ்), "சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரி" (வராகி மாலை. 32.)

8

கருத்தன எந்தைதன் கண்ணன
வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு
நல்கின பேரருள்கூர் -
திருத்தன பாரமும் ஆரமும்
செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும்அம்
மேவந்தென் முன்னிற்கவே.

(உரை) தாயே, எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன் மலையாகிய மேருவைப் போலப் பருத்திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தனபாரமும், அவற்றின் மேல் உள்ள முத்துமாலையும், சிவந்த திருக்கரத்தில் உள்ள கரும்பு வில்லும், மலரம்புகளும், மயிலிறகின் அடிக்குருத்துப் போன்ற புன்னகையும், தேவியாகிய நீன். பூரணத் திருக்கோலமும் என் முன் நின்று காட்சி யருளுக.