பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

மிழில் தெய்வங்களைத் தோத்திரம் செய்து வழிபட எத்தனையோ கருவிகள் இருக்கின்றன. தெய்வத் திருவிளையாடல்களை நன்கு விளக்கும் புராணங்கள் ஒருபால் இருப்ப, அத்தெய்வங்களைப் பாட்டுடைத் தலைவராக வைத்துப் பல வகையான பிரபந்தங்களைப் பாடியிருக்கிறார்கள், தமிழ்ப் பெரும் புலவர்கள். தேவாரம் முதல் இந்தக் தோத்திர இலக்கியங்கள் கங்கை வெள்ளம் போலத் தமிழில் பெருகி வந்திருக்கின்றன. தமிழ்ப் புலமை நிரம்பிய புலவர்களும், தெய்வ பக்தி தழைத்த அடியார்களும், யோகியரும். ஞானியரும் தத்தம் வழிபடு கடவுளேப் பாராட்டி இயற்றிய நூல்கள் அளவிறந்தன.

அவற்றுள் அபிராமி அந்தாதி ஒன்று. இது திருக்கடவூரில் வாழ்ந்திருந்த அபிராமி பட்டர் என்ற தேவி உபாசகரால் இயற்றப்பெற்றது; அத் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அபிராமி அம்பிகையின் புகழாக அமைந்தது: காப்புச் செய்யுள் ஒன்றும், பயன் ஒன்றும் உள்ளிட்டு நூற்றிரண்டு செய்யுட்களை உடையது. இடையிலுள்ள நூறு செய்யுட்களும் அந்தாதியாக அமைந்து இறுதிப் பாடலும் முதற் பாடலும் மண்டலித்து வந்துள்ளன. வரப்பிரசாதியும் மெய்ஞ்ஞானச் செல்வருமாகிய அபிராமிபட்டர் தேவியின் திருவருளில் மூழ்கித் திளைத்தவராதலின் அவருடைய வாக்காகிய இந்நூலைப் பாராயணம் செய்தலால் பலவகை நன்மைகள் உண்டாகுமென்று கருதி இந்நாட்டில் பலர் அங்ஙனம் செய்து வருகின்றனர்.

பக்திச் சுவையும், அநுபவாதிசயப் பெருக்கை வெளியிடும் முறையும், எளிய நடையும் அமைந்த இந்நூலை உரை-