பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

17

ஐம்பெரும் பூதங்களுமாகி விரிந்த தாயே, இத்துணைப் பெரிய பொருளாகிய நீ இரங்கத்தக்க அடியேனது சிற்றறிவின் எல்லைக்கு உட்பட்டது வியப்புத் தருவதாகும்.

கிளர்தல்-மேன்மேலும் எழுதல். ஒளிக்கு இடம்-சந்திர சூரியாக்கினிகளாகிய ஒளிப் பொருள்களுக்கெல்லாம் மூல காரணம். வெளியே! 'பராகாசா' (782) என்னும் லலிதாதேவியின் திருநாமத்தை நினைக்க. விரியும் பொழுது ஆகாசம், தீ என்னும் முறைப்படி வீரிதலின் வெளிமுதற் பூதங்கள் என வெளியை முன் வைத்தார். அடங்கும் முறையில் ஆகாசம் இறுதியில் நிற்கும்; “வானந்த மான வடிவுடையாள்" (11) என்று முன்னே கூறியது காண்க.

16

அதிசய மான வடிவுடை '
யாள் அர விந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தர
வல்லி துணை இரதி
பதிசய மான தபசய
மாகமுன் பார்த்தவர்தம் .
மதிசய மாகஅன் றோவாம
பாகத்தை வவ்வியதே.

(உரை) வியப்பைத் தரும் திருவுருவத்தை உடையவள், தாமரை மலர்கள் யாவும் தம்மினும் உயர்ந்த அழகுடைய தென்று துதிப்பதற்குக் காரணமாக அவற்றை வென்று பெற்ற வெற்றியையுடைய திருமுகத்தைக் கொண்ட அழகிய கொடிபோல்பவள், தனக்குத் துணையாகிய, இரதிக்கு நாயகனாகிய மன்மதன் பிற இடங்களில் பெற்ற வெற்றியெல்லாம் தம்முன் இழந்து தோல்வியாகும்படி, முற் காலத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்து நோக்கிய சிவபிரானது புத்தியை வெற்றி கொள்ளவல்ல வோ அவரது இடத்திருப்பாகத்தைக் கவர்ந்து கொண்டது?