பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அபிராமி அந்தாதி

என்றும் மறவாமல் நிலையாக நின்று துதிசெய்வேன்; இனி எனக்கு உளதாம் குறை யாது?

முதல் மூவருக்கும் அன்னை: (22) "மும்முதற்கும் வித்தே" (மீனாட்சியம்மை பின்ளைத் தமிழ்.) மருந்து: “பிணிக்கு, மருந்தே" (24) என்றார் முன்னும்.

25

ஏத்தும் அடியவர் ஈரே
ழுலகினை யும்படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவ
ராம்கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங் கேமணம்
நாறும்நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறிய
வாறு நகையுடைத்தே.


(உரை) மணம் வீசும் கடம்ப மலரை அணிகின்ற கூந்தலையுடைய தேவி, நின்னைத் துதிக்கும் அடியவர்களோ, ஏழு உலகங்களையும் படைத்தும் பாதுகாத்தும் சங்காரம் செய்தும் தம் தொழிலை நடத்தித் திரிகின்ற மும்மூர்த்திகளாவர்; அங்ஙனம் இருப்பவும் நின்னுடைய மணம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத அடியேனுடைய நாவில் தங்கிய பொருளற்ற, மொழிகளும் துதிகளாக ஏற்றுக்கொள்ளப் பெற்று, ஏற்றம் பெற்றது நகைத்தற்குரிய செயலாகும்.

மும்மூர்த்திகள் புகழும் புகழ்ச்சி நிற்கவும் என் புன்மொழி ஏற்றம் பெற்றதென்ற தொருகுறிப்பும் தோற்றியது. மூவரும் புகழ்தல்: 14. அம்பிகைக்குக் கடம்பமலர் - உவப்புடையது; "தாமங்கடம்பு” என்பர் பின் (73). 'கதம்ப மஞ்சரீக்லுப்த கர்ணபூர மனோஹரா' (லலிதா. 21). புன்மொழி-பொலிவற்ற சொற்கள்; பொருட் பொலிவும் சொற்பொலிவும் இல்லாதன.

26