பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அபிராமி அந்தாதி

இரண்டு திருவடிகள். அடைத்தல்- இன்னதை இன்னார் செய்க வென வரையறுத்து ஒப்பித்தல். கந்தரி: 5, 7, 17, 27 36.

சொல்லும் பொருளும் எனநட
மாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடி
யேநின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்
கேஅழி யாஅரசும்
செல்லும் தவநெறி யும்சிவ
லோகமும் சித்திக்குமே.

(உரை) ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் நாயகராகிய நடராஜ மூர்த்தியுடன் சொல்லும் பொருளும்போல இணைந்து நிற்கும் மணமலர்க் கொடி போன்றாய், நின் நாள் மலர்போன்ற திருவடிகளை இரவும் பகலும் தொழுகின்ற தொண்டர்களுக்கே அழியாத அரச பதவியும், என்றும் நடைபெறும் தவ வாழ்க்கையும், சிவலோக பதவியும் கிடைக்கும். சொல்லும் பொருளுமென: "சொல்வடி வாய்நின் னிடம்பிரியா விமயப் பாவை, தன்னையுஞ்சொற் பொருளான

வுன்னையுமே" (திருவிளையாடல், இடைக்காடன். 10). நடராஜப் பெருமானுடன் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருநாமம் சிவகாமவல்லி யென்பதாதலின் அதனை நினைந்து கொடியென்றார். பரிமளக்கொடி: 15, குறிப்பு. அம்பிகையின் அடியார் இகலோக வாழ்வும் பரலோக வாழ்வும் பெறுவர் என்றபடி; "இகபரங்கள் முழுதுந் தருவாய்" (மீனாட்சி. முத்தப். 3). இல்லற நெறி நின்று அரசாண்டு அதன் பின்னர்த் துறவற நெறி நின்று தவம் செய்து அதன் பயனாகச் சிவலோக வாழ்வு பெறுவரென்று முறையே கூறினார்.

28