பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

31

(உரை) உமாதேவியும், அத் தேவியை ஒரு பாகத்தில் உடைய சிவபிரானும் சேர்ந்து ஓருருவாக எழுந்தருளி வந்து, பரிபக்குவமற்ற என் போன்றோரையும் தம் திருவடிக்கு அன்பு செய்யும்படி நன்னிலையில் வைத்தருளினர்; ஆதலின் இனிமேல் கடைப்பிடிப்போமென்று எண்ணி நாம் ஆராய்தற்குரிய சமயங்கள் வேறு இல்லை; எமக்குப் பிறவிப் பிணி நீங்கியதாதலின் இனி எம்மைப் பெற்று எடுப்பதற் குரியவளாகிய தாயும் இல்லை: மூங்கிலைப்போல் உள்ள தோளையுடைய மகளிர்பால் வைத்த மோகம் போதும்.

ஏகவுருவென்றது அர்த்த நாரீசத் திருக்கோலத்தை. எமை யென்றது ஏனைய அன்பர்களையும் உளப்படுத்திக் கூறியது; ஆட்கொள்ளப்பெற்ற பெருமிதம் தோன்றக் கூறியதெனலும் ஆம். அர்த்தநாரீசுவர மூர்த்தித் தியானம் பெண்ணாசையை ஒழிக்க வழியென்பது. “நின்றனையே, பெண் பயி லுருவ மொடுநினைந் தெனது பெண்மய லகற்றுகா ளுளதோ” (சோணசைல மாலை, 10) என்பதனாலும் பெறப்படும். சமயங்களும் இல்லை: “வேறுஞ் சமயமுண் டென்று கொண் டாடிய வீணர்" (63), "இனியானொருவர் மதத்தே மதிமயங்கேன்” (92) என்று பின்வருதல் காண்க.

31

ஆசைக் கடலில் அகப்பட்
டருள்அற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற் பட இருந்
தேனைநின் பாதம்எனும்
வாசக் கமலம் தலைமேல்
வலியவைத் தாண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லு வேன்ஈசர்
பாகத்து நேரிழையே.

(உரை) பரமேசுவரரது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் நுண்ணிழைகளை அணிந்த தேவி, மண் பெண்