பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

43



கண்டுசெய் தால்அது கைதவ
மோஅனறிச் செய்தவமோ
மிண்டுசெய் தாலும் பொறுக்கைநன்
றேபின் வெறுக்கை அன்றே.

(உரை) தேவி, நின் திருவடிக்குத் தொண்டு செய்யாமலும் நின் பாத சேவை செய்யாமலும் உண்மைப் பொருள் இன்னதென்று தெளிந்து தம் மனம் விரும்பியவற்றையே பழங்காலத்தில் செய்த மெய்ஞ்ஞானியராகிய நின் அடியார்கள் இருந்தனரோ, இல்லையோ; (இருந்தனராதலின்) அவரைப்போலவே அடியேனும் தெரிந்து என் இச்சைக்குரிய செயல்களைச் செய்தால் அது வஞ்சகமாகுமா? அல்லது அந்த மெய்ஞ்ஞானியர் செய்கையெல்லாம் தவமாதலைப்போல இவையும் யான் செய்யும் தவமாகுமா? அடியேன் மாறுபாடான செயல்களைச் செய்தாலும் நீ பொறுத்தல் நலமாம்; என்னை அதனால் வெறுத்து ஒதுக்குதல் நன்று அன்று.

சரியை, கிரியை, யோகம் கடந்த ஞானச் செல்வம் எது செய்யினும் அதுவே தவமாகுமாதவின் அத்தகையோரைப் பண்டு செய்தாரென்பதனால் சுட்டினார்; "தேறு மோனமா ஞான போதனார் செய்த செய்கையே செய்யு மாதவம், கூறும் வாசகம் யாவு மந்திரம் கொண்ட கோலமே கோல மாகுமால்” (பாசவதைப் பரணி, 305).

45



வெறுக்கும் தகைமைகள் செய்யினும்
தம்அடி யாரைமிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்
றேபுது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற் றான்இடப்
பாகம் கலந்தபொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும்
யான் உன்னை வாழ்த்துவனே.