பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

57

(உரை) உலகத்து உயிர்க்கெல்லாம் மாதாவே, பார்வதி தேவியே, சிவந்த கண்ணையுடைய திருமாலுடைய அழகிய தங்கையே. 'நாய் போன்ற என்னையும் நீ இங்கே நின் பார்வைக்கு உரிய பொருளாகத் திருவுள்ளங் கொண்டு விரும்பி நீயே வலிய வந்து, இவனை ஆட்கொள்ளலாகும், ஆகாது என்று ஆராயும் நினைவு இல்லாமல் அடியேனை அடிமை கொண்டாய்; நீ இருந்தபடி நின்னைப் பேய் போன்ற யான் அறியும் ஞானத்தை அருளினாய்; அடியேன் எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன்!

நினைவின்றி: நினைந்து பார்ப்பதாயின் யான் ஆட்கொள்ளற்

குரியவனாகேனன்ற குறிப்பினது; "யானாரென் னுள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார். வானோர் பிரானென்னை யாண்டிலனேல் மதிமயங்கி" (திருவாசகம்) என்பதில் ' மதிமயங்கி' என வைத்தது போல, இதையும் கொள்க. என் நினைவின்றியே நீ வந்து ஆண்டு கொண்டாய் என்பதும் ஒன்று. செங்கண்மால் திருத்தங்கைச்சி: மால் தங்கைச்சி கனிகையுமை" (திருப்புகழ்).

61

தங்கச் சிலை கொண்டு தானவர்
முப்புரம் சாய்த்துமத
வெங்கட் கரிஉரி போர்த்தசெஞ்
சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட
நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும்எப்
போதும் என் சிந்தையதே.

(உரை) மேரு மலையாகிய பொன்வில்லைக் கொண்டு அசுரர்களுக்குரிய திரிபுரத்தை அழித்து, மதம் பொருந்திய செவ்விய கண்ணையுடைய யானையின் தோலைப் போர்த்த செவ்விய வீரனாகிய சிவபெருமான் திருமேனி முழுவதும்