பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

61

தோத்திரம் செய்து தொழுதுமின்
போலும்நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில்வை
யாதவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி குணம்குன்றி
நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழ
லாநிற்பர் பார்எங்குமே.

(உரை) தேவி, நின்னை வாயால் துதிசெய்து, உடம்பால் வணங்கி, மின்னலைப்போலச் சுடர்விடும் நின் திருமேனித் தோற்றத்தை ஒரு கணப் போதாவது மனத்தில் இருத்தித் தியானம் செய்யாதவர், கொடைத் தன்மை, குடிப் பிறப்பு. கோத்திரம், கல்வி, நல்ல குணம் முதலியவற்றில் குறை பாடுடையவராக உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பிச்சைப் பாத்திரத்தைக் கைக்கொண்டு குடிசைதோறும் பிச்சைக்காகத் திரிவார்கள்.

மின்போலும் தோற்றம்: 1, 55. ஒரு மாத்திரைப்போது தியானித்தல்:48. “கரவோடு நின்றார் கடிமனையிற் கையேற், றிரவோடு நிற்பித்த தெம்மை-அரவோடு, மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க, மாட்டாமை பூண்ட மனம்" (பழம்பாட்டு) என்பது இங்கே ஒப்புநோக்கற்குரியது.

67

பாரும் புனலும் கனலும்வெங்
காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி
ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம
சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம்உடை யார் படை
யாத தனம்இல்லையே.