பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
viii

எண்ணி அக்கருத்தைக் கூறவே, பட்டர் அதற்கு இணங்கவில்லை; "தங்கள் சந்ததியாரின் நன்மையை உத்தேசித்தாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வற்புறுத்தி வேண்டிக்கொண்டார். பட்டர் ஒருவாறு உடன்படவே, அரசர் அக்கிராமத்திலும் அருகிலுள்ள கிராமங்களிலும், வருஷம் ஒன்றுக்கு வேலிக்கு எட்டு நாழி நெல் அவருடைய சந்ததிக்கு அளிக்கும்படி சுரோத்திரிய உரிமையை அளித்துச் சாசனம் செய்து கொடுத்தார். இவ்வுரிமையை இன்றும் அந்தப் பரம்பரையினர் அநுபவித்து வருகின்றனர்.[1]

அபிராமி பட்டர், நூறு பாடல்கள்பாடி அந்தாதியை நிறைவு செய்தார். அவர் இந்த நூலையன்றித் திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள கள்ள விநாயகர் பதிகம், அமுத கடேசர் பதிகம், கால சங்கார மூர்த்தி பதிகம், அபிராமிபம்மை பதிகங்கள் இரண்டு ஆகிய பிரபந்தங்களையும் இயற்றியிருக்கிறார்.[2]

அபிராமி பட்டரைப்பற்றிக் கர்ணபரம்பரையாகச் சில வரலாறுகள் வழங்கி வருகின்றன. அவை வருமாறு:


  1. சரபோஜி மன்னர் அளித்த செப்புப் பட்டயம் இன்றும் இருக்கிறதென்பர். திருக்கடவூர் வட்டம், ஆக்கூர் வட்டம், திருவிடைக்கழிவட்டம், நல்லாடை வட்டம், செம்பொன்பள்ளி வட்டம் என்ற ஐந்து இடங்களிலும் இப்படி நெல் பெறும் உரிமை இப் பரம்பரையினருக்குக் கிடைத்தது. ஆனால் இப்போது இந்தப் பரம்பரையில் வந்த திரு நா. அமிர்த பாரதியார் என்பவர் திருவிடைக்கழிவட்டம், நல்லாடை வட்டம் ஆகிய இரண்டிடங்களில் மட்டும் நெல் தொகுத்து அதனைக் கொண்டு நவராத்திரி ஒன்பது நாட்களிலும் திருக்கடவூர் அபிராமியம்பிகைக்குச் சிறப்பான பூசை முதலியவற்றை நடத்தி வருகிறார். அவர் வயலின் வித்துவான். திருச்சிராப்பள்ளி ஸ்ரீ வரதசாசப் பெருமாள் கோயில் தெருவில் இப்போது வாழ்ந்து வருகிறார்.
  2. இவை 'திருக்கடவூர் அபிராமி பட்டர் பிரபந்தம்' என்ற பெயரோடு ஸ்ரீ வைகுண்டம் குமரகுருபரன் சங்கத்தாரால் வெளியிடப் பெற்றிருக்கின்றன.