பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அபிராமி அந்தாதி

தேவியின் திருவுருவத்தைத் தியானம் செய்யும் அடியார், இந்திர பதவி பெற்றுக் கற்பக விருட்சத்தின் நிழலில் வீற்றிருப்பர்; பின்பு பூமியில் பிறந்திறந்து இடையறவின்றி வரும் பிறவியைத் தம்மைப் பெறும் தாய்மார் இல்லாமையாலே மங்கச் செய்வர்.

மங்குவர் : தன்வீனை பிறவினைப் பொருளில் வந்தது. தாயரின்றி: "ஈன்றெடுப் பாளொரு தாயுமில்லை” (37). ஈரேழ் புவனமும் பூத்த உந்தி: 13. தேவியைத் தியானித்தவர்கள் சொர்க்க போகமும் பிறகு வீடும் பெறுவர் என்றபடி.

75

குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல்
லாம்நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற
நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்
பிரான்ஒரு கூற்றைமெய்யில்
பறித்தே குடிபுகு தும்பஞ்ச
பாண பயிரவியே.

(உரை) வண்டுகள் கிண்டுவதனால் மணமுடைய தேன் கட்டவிழ்ந்து சொரிகின்ற கொன்றைக் கண்ணியைத் திருமுடியில் அணிந்த சிவபிரானது ஒரு பகுதியை அவர் திருமேனியினின்றும் வலியக் கவர்ந்து அங்கே குடி புகுந்தருளிய பஞ்சபுட்ப பாணத்தையுடைய பைரவியே, நின் திருமேனிக் கோலத்தை யெல்லாம் அடியேன் மனத்துள் தியானம் செய்தேன்; அதன் பயனாக நின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து யமன் என் உயிரைக் கொள்வதற்கு வருகின்ற நுணுகிய வழியை அடைத்துவிட்டேன்.

யமவாதனை ஒழிந்ததென்றபடி. பிறர் அறிவதற்கு அரிய நுண்மையதாதலின் 'நேர்வழி' என்றார்; நேர்தல்-நுணுகுதல். பயிரவி-பைரவராகிய சிவபிரானது பத்தினி (லலிதா. 276); “த்ரிபுர பயிரவி" (தக்க.)

76