பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
109
சரணாரவிந்தம்

முனிவர்களும் இருத்தலைச் சொன்னார். அவள் அருளைப் பெற்றவர்கள் அவர்கள்,

ஆனந்தமாய் என்றவர் அடுத்து அறிவாய் என்றார். அறிவு சித்துப்பொருள். பிறகு நித்தியமாகிய அமுதத்தைச் சொன்னார்; அது சத்துப்பொருள். ஆகவே இந்த மூன்றினாலும், அம்பிகை ஆனந்தமாய்ச் சித்தாய்ச் சத்தாய் நிற்பவள். சச்சிதானந்த ஸ்வரூபி என்பதும் புலனாகும். "ஸ்ச்சிதானந்த ரூபிணி" (700) என்பது தேவியின் திருநாமங்களில் ஒன்று.

அம்பிகை தத்துவங்கள் எல்லாமாகி விளங்குகின்றவள். கடைசியில் தோன்றும் தத்துவங்கள் பஞ்சபூதங்களாகிய ஐந்து. அந்த ஐந்தில் கடைசித் தத்துவம் பிருதிவி. பஞ்ச பூதங்களைக் கீழிருந்து எண்ணினால் இறுதியானது வான். அதனை அந்தமாகக் கொண்ட ஐம்பெரும் பூதங்களும் அம்பிகையின் வடிவே. ஞானக் கண்கொண்டு பார்க்கிறவர்களுக்கு இந்த உண்மை புலனாகும்; அல்லாதவர்களுக்கு ஐம்பூதமாகத் தோன்றும்.

"மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதற் பூதம்"

என்பது திருமூலர் வாக்கு. ஆதலின் ஐம்பெரும் பூதமாகக் காட்சி அளிக்கிறவள் பரதேவதையாகிய அன்னையே என்று கொள்ளவேண்டும். இதை அடுத்தபடி நினைக்கிறார் அபிராமிபட்டர்.

வான் அந்தமான வடிவுடையாள்

பஞ்சபூதேசி (949) என்பது அம்மையின் திருநாமங்களுள் ஒன்று. "உயிரோடு பூதமைந்தும் ஒரு முதலாகி நின்ற உமை" என்பது திருப்புகழ்.