பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அபிராமி அந்தாதி



ஆசாரங்களை மேற்கொண்டு உண்ணத்தகாததை உண்டு. மதிமயங்கி அலைகிறார்" என்றார்கள். அவர்கள் ஏசுவதைக் காதில் வாங்காமல் அபிராமி யம்பிகையை நாள்தோறும் தரிசித்துத் தியானம் செய்து, 'உள்ளத்தே. விளைந்த கள்ளால் உண்டான களியிலே பெருமிதத்தோடு: மிதந்து வந்தார் அவர்.

சரபோஜி மன்னர் அவரை அபிராமி சந்நிதியில் கண்டபோது அவர் அம்பிகையின் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். சந்திரமண்டலத்தில் அமுதமயமாய் வீற்றிருக்கும், திரிபுர சுந்தரியை தம்முள்ளே தரிசித்து அங்கே சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற அப் பெருமாட்டியின் திருக்கோலத்தில் ஆழ்ந்திருந்தார். கண்ணை விழித்தபோது அரசர் ஏதோ கேள்வி கேட்கவும், அவருக்குப் பெளர்ணமிதான் சொல்லில் வந்தது. அவர் ஒளிமயமான காட்சியிலிருந்து இறங்கினவர் அல்லவா?

வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது அவருக்கு உலக உணர்வு தெளிவாக வந்தது. தாம் தவறாகப் பெளர்ணமி என்று சொல்லிவிட்டதை அறிந்தார். தம்மைக் குறை: கூறுவார்க்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு பலமாக ஏற்பட்டதைத் தெரிந்து கொண்டார். கேள்வி கேட்டவர் மன்னர் என்பதையும் நினைந்து பார்த்தார்.

வீட்டை அடைந்தவுடன் அவர் மனம் சற்றே குழம்பியது. 'அம்பிகையின் சந்நிதியில் அப்படி வந்தது வார்த்தை. அவள்தான் அப்படிப் பேசச் செய்துவிட்டாள். நன்றே வரினும் தீதே வருகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை' என்று தெளிவு பெற்றார். உடனே அபிராமியம்மையைப் பாடத் தொடங்கினார். மனம் கனிந்து உருகித் தமிழில் பக்தி மணக்கும் செய்யுட்களைப் பாடும் பழக்கம் அவருக்கு இருந்தது.