பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அபிராமி அந்தாதி



79-ஆவது பாடலை முடித்தார். மன்னர் வணங்கி, "உங்கள் பெருமையை அறியாமல் இருந்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் தரிசனம் பெற்ற காரணத்தால் அபிராமி அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து உங்கள் பெருமையையும் விளக்கியருளினாள்" என்று நிகழ்ந்ததைச் சொன்னார்.

கேட்ட அபிராமிபட்டர் அம்பிகையின் பேரருளை எண்ணி வியந்தார். "அவளைத்தான் பாடிக்கொண்டிருக்கிறேன். அவளுடைய காட்சியிலே நான் உண்மையிலே பித்தனாகிவிட்டவன்தான்" என்றார்.

மன்னர் அந்தப் பாடல்களை முழு நூலுருவத்தில் நூறு பாடலால் நிறைவேற்ற வேண்டும் என்று. வேண்டினார். தாம் பெற்ற அநுபவத்தையும் மன்னர் பெற்ற அநுபவத்தையும் இணைத்து ஆனந்த அதிசயப் பெருக்கோடு 80-ஆவது பாட்டைப் பாடினார்.

கூட்டிய வாஎன்னைத் தன்அடி யாரில்! கொடியவினை
ஒட்டிய வா! என்கண் ஓடிய வா! தன்னை உள்ளவண்ணம்
காட்டிய வா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!'
ஆட்டிய வாநடம்! ஆடகத் தாமரை ஆரணங்கே!'

[ஆயிர இதழ் அமைந்த பொற்றாமரையில் எழுந்தருளியிருக்கும் அரிய அழகியாகிய தேவி, ஒன்றுக்கும் பற்றாத, என்னைத் தன் அடியாருள் ஒருவனாகச் சேர்த்தருளிய வாறும் அங்ஙனம் சேர்த்துப் பின் என்பால் உள்ள கொடிய இருவினைகளையும் போக்கியவாறும், என்பால் அருள்புரிய ஒடி வந்தவாறும், தன் திருக்கோலத்தை உள்ளுபடியே காட்டியவாறும், அதனைத் தரிசித்து அறிந்த கண்ணும் மனமும் ஆனந்த மேலீட்டால் மகிழ்கின்றவாறும், இவ்வாறெல்லாம் என்னைத் திருவருள் நாடகம் ஆட்டியவாறும் என்ன அதிசயம்]

மேலே இருபது பாடல்களையும் பயனையும் பாடி அபிராபி அந்தாதியாகிய அந்த நூலை நிறைவேற்றினார் அபிராமிபட்டர்.