பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காரமர் மேனிக் கணபதி

விநாயகர், சிவபெருமான், அம்பிகை எல்லோரையும் ஒருங்கே தியானிக்கிறார் இந்தப் பேரன்பர். இறைவன் எல்லாக் கோயில்களிலும் எழுந்தருளியிருக்கிறான். திருக்கடவூரிலும் அமிர்தகடேசுவரன் என்ற திருநாமத்தோடு விளங்குகிறான். முதலில் பெரிய தலமாக ஒன்றை நினைக்கலாம் என்று தோன்றியது. சிவபெருமானுடைய தலங்களில் சிறந்ததாகக் கருதப்பெறுவதுதில்லை மற்றவற்றையெல்லாம் பெயர் குறிப்பிட்டுச் சொன்னால்தான் விளங்கும். கோயில் என்று சொன்ன மாத்திரத்தில், அதனைத் தன் பெயராக உடைய சிதம்பரந்தான் நினைவுக்கு வரும். இவர் இயற்றப் புகும் அந்தாதிக்கு உரியவள் அபிராமி. அவ் வம்பிகை திருக்கடவூரில் எழுந்தருளியிருப்பவள். அபிராமிபட்டர் அங்கே எழுந்தருளியிருக்கும் அர்ச்சா மூர்த்தியை மாத்திரம் பாட வரவில்லை. எங்கும் நிறைந்திருக்கும் மகாமாதாவாகிய திரிபுர சுந்தரியையே பாடப் போகிறார். அவளுக்குத் திருக்கடவூர் மாத்திரமா சொந்தம்; ஆகையால் அவள் எழுந்தருளியிருக்கும் இடங்களிற் பலவற்றையும் இடையிடையே சொல்லப் போகிறார். முதலில் எல்லாத் தலங்களிலும் சிறந்த சிதம்பரத்தைப் போற்றத் தொடங்குகிறார்.

சிவபெருமானை வழிபடுகிறவர்களுக்குத் தில்லை என்றதும் நடராஜப் பெருமான் நினைவு எழும். தொடர்ந்து சிவகாமசுந்தரியின் நினைவும் உண்டாகும். லயம் இல்லாவிட்டால் அப்பெருமானுடைய ஆட்டம் நடவாது. அந்த லயத்தை உண்டாக்குகிறவள் அம்பிகை தானே? அவள் இப்போது தனியே நின்று தாளம் போடுகிறாளேயன்றி, எப்போதும் ஐயனிடமிருந்து பிரியாமல் அவனுடைய வாமபாகத்திலே இருப்பவள் அல்லவா?

அந்தப் பழைய நிலையை-ஒட்டிய நிலையை-தம் உள்ளக் கண்ணினால் பார்க்கிறார் பட்டர். தில்லை நடராஜனுடைய வாமபாகத்தில் அம்பிகை இருக்கிறாள்.