பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிராமி அந்தாதி

17

யின் உதயத்தால் அன்பர்களின் இதயத்தாமரைகள் மலர் கின்றன. மக்கள் செஞ்சுடரோன் வந்தானென்று துயில் நீங்கி முயற்சியில் ஈடுபடுகிறார்கள்; அம்பிகையின் சமுதாய சோபையில் கலந்தவர்கள் தம்முடைய தாமத குணத்தினின்றும் நீங்கி விழித்துக் கொண்டு தம்முடைய தொழிலாகிய உபாசனையைச் செய்கிறார்கள். -

இப்படிப் பல படியாக விரிக்குமாறு அந்த உவமை அமைந்துவிடுகிறது. ஆனாலும் இங்கே முக்கியமாக அம்பிகையின் திருமேனி லாவண்யத்துக்கு உவமையாக நிற்கிறான் உதயசூரியன்.

உதய சூரியனாகிய உவமை பொருத்தந்தான். அம்பிகையின் உயர்வுக்கும் சோதி வடிவுக்கும் அது ஏற்றதாக அமைந்துவிட்டது. ஆனால்?

இங்கே ஓர் எண்ணம் குறுக்கிடுகிறது. சூரியன் வானத்தில் உலவுகிறான். நாம் வா என்றால் வருவ தில்லை; போ என்றால் போவதில்லை நம்முடைய விருப்பத்தையோ வெறுப்பையோ எண்ணி அவன் ஒன்றும் செய்வதில்லை. அம்பிகையோ அத்தகையவள் அல்லள். வானவருக்கும் ஏனையவருக்கும் எட்டாதவளாக இருந் தாலும் அடியவர்களுக்கு எப்போதும் அணிமையில் இருக்கிறாள். அவள் தன் உருவத்தைக் காட்டுவது அடியவர்களின் வணக்கத்தைப் பெறுவதற்காகவே. அவளை உபாசகர்கள் எப்போதும் தலையால் பணிகிறார்கள். மங்கைமார் தம் உச்சியிலே திலகத்தைத் தாங்குகிறார்களே, அது போல இந்தச் செம்மையுருவமைந்த பிராட்டியை அன்பர்கள் முடியணி யாக்குகிறார்கள். ஆகவே வணங்குவதற்குறியவளாக, அடியாரின் தலைக்கு அணியாக, அவர்களுக்கு அண்ணியவளாக, செந்நிறம் பூத்தவளாக இருக்கும் அவளுக்கு உச்சியிலே அணியும் திலகத்தை உவமை சொல்லலாமே;எழில்-2