பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அபிராமி அந்தாதி

வர்கள் என்று சொல்லுவார்கள்: அல்லது தனிமுதற் கடவுளைச் சைவர்கள் பரசிவம் என்றும், வைணவர்கள் பரவாசுதேவன் என்றும் வழிபடுவார்கள். பரம் என்ற சொல் மேலானது என்னும் பொருளுடையது. அவ்வாறே ஸ்ரீவித்தியா உபாசகர்கள் அம்பிகையைப் பராசக்தி என்று கொண்டாடுவார்கள். ஸ்ரீராஜராஜேசுவரி, மகா திரிபுரசுந்தரி என்றெல்லாம் வழங்கும் அந்தப் பரமேசுவரி திரிமூர்த்திகளையும் பிற தேவர்களையும் தன்னுடைய ஆணையைத் தாங்கி நடத்தும் அதிகாரிகளாகக் கொண்டு விளங்குகிறாள் என்று கொள்வர். துர்க்கை, லக்ஷ்மி, சரசுவதி என்ற மூன்று சக்திகளும் அந்த பெருமாட்டியின் கூறுகளாக மும்மூர்த்திகளிடமும் இருந்து அவரவர்களின் தொழிலைச் செய்விப்பவர்கள். அந்த வகையில் சிவனுடைய சக்தியாக இருக்கும் உமாதேவி பச்சை நிறம் உடையவள். லக்ஷ்மி, சரசுவதி ஆகிய இருவர்களையும்விட உமாதேவியினிடம் அம்பிகையின் கூறு மிகுதி.

எல்லோருக்கும் மேலாக விளங்கும் அம்பிகையாகிய ஸ்ரீராஜராஜேசுவரி செம்மை நிறம் உடையவள். செம்மை என்பது இந்த நாட்டில் நிறைவுக்கும், முழுமைக்கும். உயிர்த் தன்மைக்கும், நேர்மைக்கும், நன்மைக்கும், மங்களத்துக்கும் அடையாளம். இதை முன்பும் பார்த்தோம். அம்பிகை எங்கும் நிறைந்தவளாய், முழுமுதற் பொருளாய், உயிர்களுக்கு உயிராய், நேர்மையான அருளாணையைச் செலுத்துபவளாய், நலந்தரும் மாதாவாய் சர்வமங்களையாய் விளங்குகிறாள் என்பது அவளுடைய செவ்வண்ணத்தால் பெறப்படும் குறிப்பாகும். அது வெறும் சிவப்பு அன்று; தேசுடைய சிவப்பு. ஒளி விடும் சிவப்பு: கண்ணைக் குளிர்விக்கும் சிவப்பு: அந்தச் சிவப்புக்குத்தான் முதல் பாட்டில் ஆறு உவமைகளைச் சொன்னார் அபிராமிபட்டர்.