பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிராமி அந்தாதி

27

காதலன், ஆருயிர்க் காதலி என்று பாராட்டி அன்பு செய்யும் காதலர்களை உயிர்த்துணை என்று சொல்லலாமா? அவர்கள் வாழ்க்கைத் துணையேயன்றி உயிர்த் துணை ஆக மாட்டார்கள். காதலி தன் காதலன் உயிரைக் காப்பாற்ற முடியாது. அப்படியே காதலனும் தன் காதலி உயிரைக் காப்பாற்ற முடியாது.

உயிர் இந்த உடம்போடு இருக்கும் போது உடன் இருந்து உணவு தந்து வளர்க்கிற தாய்தான் எல்லோரையும் விடச் சிறந்த அன்புடையவள். அவள் இந்த ஒரு பிறவியில் தன் அன்பைச் சொரியலாம். நமக்கு முன் அவள் இறந்தாலும், அவளுக்கு முன் நாம் இறந்தாலும் அவளுடைய அன்பு நமக்குப் பயன்படாமல் போய்விடும் அப்படியின்றி உயிர் எங்கே சென்றாலும் எந்தப் பிறவி எடுத்தாலும் அங்கும் வந்து நமக்குத் துணை நிற்கும் யாரேனும் இருந்தால் அவளை உயிருக்குத் துணை யென்றும் மேலான துணையென்றும் சொல்லலாம் அவள் தான் அபிராமி. -

அவள் எக்காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்களுக்கும் தாயாக விளங்குகிறாள். அவளுடைய கருணைக்கு. எல்லை இல்லை. ஆருயிர்களுக்குத் தாயாக விளங்கும் இந்தப் பெருமை எல்லாவற்றையும் விடச் சிறந்தது. அதனால்தான் லலிதாம்பிகையின் நலன்களையெல்லாம். சொல்லப் புகுந்த திருநாம வரிசைகளில் முதல் திருநாமமாக "ஸ்ரீ மாதா" என்பதை லலிதா சகசிரநாமம் வைத்துப் போற்றுகிறது. நாவுக்கரசர் இறைவனை, "தொடர்ந்து நின்ற என் தாயானை" என்று பாராட்டுவர்.

உயிருக்கு எக்காலத்தும் துணையாக நின்று பாதுகாப்பவள் அம்மையாதலால் அவளே மேலான துணையாக விளங்குகிறாள். உயிருக்கு மட்டுமா துணை?