பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அபிராமி அந்தாதி

அதுதான் வேதம். அம்பிகையே அதன் வடிவாக நின்று நமக்கு அறிவுறுத்துகிறாள்; அதனூடே நின்று இலங்குகிறாள். வேதத்துக்கும் அம்பிகைக்கும் உள்ள தொடர்பை அடுத்தபடி விளக்குகிறார் ஆசிரியர். அவள் வேத சாகைகளாகப் படர்ந்திருக்கிறாள். வேதம் பெரிய கற்பக தருவைப் போன்றது. மரத்தின் பெருமை அதன் பரந்த கிளைகளால் தெரியவரும். ஆல மரம் பெரியது என்று சொல்கிறோம். ஏன்? அது,

"அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலாகும்"

வண்ணம் பல கிளைகளை விட்டுப் படர்ந்திருக்கிறது. அதுபோல வேதமும் சாகைகளால் விரிந்தது. அதனால், "அனந்தாவை வேதா:" என்று பெரியோர் கூறுவர். கம்பரும், -

"அலகில்லன உள்ளன வேதம் என்பன’’

என்று பாடினார். பல பணைகளையுடைய வேதம் சுருதி எனப்படும். தமிழில் கேள்வியென்பர்.

"நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப"

என்பது பரிபாடல். இவ்வாறு சாகைகளால் பரந்து விரிந்திருக்கும் வேதத்தில் அந்தக் கிளைகளாகவே இருந்து அவரவர்களுக்கு வேண்டியதை அறிவுறுத்துகிறாள் ஸ்ரீ மாதா.

சுருதிகளின் பணையும்.

★★★