பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிபுர சுந்தரி

41

‘கையில் பனிமலர்ப் பூங்கனையும் (குளிர்ந்த மலராகிய பொலிவுபெற்ற அம்புகளும்). கருப்பஞ்சிலையும் (கரும்பு வில்லும்), மென்பாசாங்குசமும் (மென்மையான பாசமும் அங்குசமும்) அணையும் (தங்கிய) திரிபுரசுந்தரியே எனக்குத் துணையும், தொழும் தெய்வமும், வேதத்தின் நடுமுடி அடியாக இருப்பவளுமாக உள்ளாள் என்பதை நாம் அறிந்தோம்’ என்று இரண்டாவது பாடலைப் பாடுகிறார் அபிராமிபட்டர்.

லலிதா பரமேசுவரியை மகா திரிபுரசுந்தரி என்று சொல்வர். திரிபுர சுந்தரி என்பதற்குத் திரிபுரங்களின் தலைவியாகிய பேரழகி என்பது பொருள். மூன்று என்ற எண்ணிக்கையுள்ள தொகுதிகள் யாவுமே திரிபுரம் எனப்படும். ஆக்கல், அளித்தல், அழிப்பு என்னும் தொழில் மூன்று; சத்துவம், ரஜஸ், தமஸ் என்னும் குணம் மூன்று; சந்திரன், சூரியன், அக்கினி என்னும் சுடர் மூன்று: ஸ்ரீ சக்கரத்தில் உள்ள கோணங்கள் மூன்று; ரேகைகள் மூன்று; பூபுரம் மூன்று அந்தர்மத்யபாதலமாகிய அடுக்கு மூன்று மனம் புத்தி சித்தம் என்பவை மூன்று; பீடங்கள் மூன்று; இடைகலை பிங்கலை சுழுமுனை என்னும் நாடிகள் மூன்று. இவை முதலிய மும்மைகள் பலவற்றின் உருவமாக இருப்பவளும் அம்பிகையாதலின் திரிபுரசுந்தரி என்ற திருநாமம் அவளுக்கு அமைந்தது.

'நான்கு திருக்கரங்களிலும் பாசம் முதலியவற்றை ஏந்தித் திரிபுர சுந்தரியாக அமர்ந்து தியானத்துக்கேற்ற திருவுருவம் படைத்த பெருமாட்டியே சப்தப் பிரபஞ்சத் தின் ஆதியாகிய வேதசொரூபியாய் விளங்குகிறாள். அவளே எனக்கு எப்போதும் எவ்விடத்தும் துணையாக இருக்கிறாள்; நான் தொழும் தெய்வமாக இருக்கிறாள்; என்னையும் பிற உயிர்களையும் பெற்ற தாயாகவும் விளங்குகிறாள்.'