பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புகல் அடைந்தேன்

திரிபுர சுந்தரியே துணையும், தொழும் தெய்வமும் சுருதிகளின் பணையும், கொழுந்தும், வேரும் என்று. அறிந்ததாகச் சொன்ன அபிராமிபட்டர், அந்த அறிவால் பயன் பெற்றதை அடுத்த பாட்டில் சொல்ல வருகிறார்.

மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான். சின்னஞ்சிறு குழந்தைப் பிராயம் முதற்கொண்டே, "அது என்ன? இது என்ன?" என்று கேட்டுக் கேட்டுப் பலவற்றை அறிந்துகொள்கிறான். அவன் கேட்கும் கேள்விகளும், அறியும் பொருள்களும் அவசியமானவையா என்பதை ஆராய்ந்தால், வேண்டாதவற்றையே மிகுதியாக அவன் தெரிந்து கொள்கிறான் என்பது தெரியவரும். புத்தி என்னும் அறையில் அழுக்கான பண்டங்களையெல்லாம் அடைத்துக்கொள்வதனால் புத்தியுல் அழுக்காகிறது; வாழ்வும் அழுக்காகிறது. எதை அறிய வேண்டுமோ அதை அறிய வேண்டும். நாம் எத்தனை பொருள்களைக் கண்டாலும் கண்ட காட்சியளவிலே நின்று விடாமல் மேலும் ஆராய்ந்து மெய்ப் பொருள் இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டும்; அதுதான் உண்மை யறிவு.

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்பது திருக்குறள்.

அம்பிகையின் திருவருள் இருந்தால் அறிய வேண்டிய வற்றை அறியும் திறம் வரும். இல்லையானால்,