பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள்ளத்தில் வா
57


மனிதரும் தேவரும் மாயா
முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே
கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும்
பகீரதி யும்படைத்த
புனிதரும் நீயும்என் புந்திளந்
நாளும் பொருந்துகவே

(மனிதர்களும் தேவர்களும் இறவாத முனிவர்களும் அணுகிவந்து தம் தலையை வணங்கி வழிபடும் செம்மையான திருவடிகளையுடைய, அகமும் புறமும் மென்மையான அம்மையே, கொன்றை மலரை அணிந்த நீண்ட சடையின் மேல் பனியை உண்டாக்கும் சந்திரனையும் பாம்பையும்: கங்கையையும் வைத்த தூயவராகிய சிவபெருமானும் நீயும் என் உள்ளத்தே வந்த எந்து நாளிலும் இணைந்து எழுந்தருளவீராக.

மாயா-மரணம் இல்லாத, குனிதரும்-வளைந்து பணியும் வார்சடை-நீண்ட சடை. பனி-குளிர்ச்சியுமாம். பகீரதி: பாகீரதி என்பது குறைந்து நின்றது: தமிழ் முடிபென்று கொள்ளுதலும் ஆம். படைத்த-கொண்ட. புனிதர்-தூய்மை உடையவர், புந்தி-புத்தி; இங்கே உள்ளத்தைக் குறித்தது, பொருந்துக வந்து அமைந்து எழுந்தருளவேண்டும்;)

இறைவியுடைய திருவடியை ஊடல் நீக்கும் பொருட்டு இறைவர் வணங்கித் தம் திருமுடிமேற் கொள்வதாகச் சொல்வது மரபு. சரணாவிந்தம்... எம்பிரான் முடிக்கண்ணியதே' (11) என்று அபிராமி பட்டரே கூறுவர்! ஆதலின் இறைவியின் திருவடியை நினைத்தவுடன் அதிற்படியும் சிவபிரான் திருமுடியையும் நினைத்தார் என்று பொருத்தம் காட்டலாம்.